Sunday, July 22, 2007

"கந்தகுரு கவசம்" -- 3




"கந்தகுரு கவசம்" -- 3 [81-135]

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135


[கந்தனருள் கூடவரும்!]

மித்தை = பொய், மாயை, அநித்தியம் [வேதாந்தம் எல்லாம் கூட மித்தையே!];

அட்டமா சித்திகள் = அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

அணிமா= அணுப்போலாகை
மகிமா= இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனும் நிறையும் பெருமை
கரிமா= மிகக் கனமாகை
லகிமா= கனமற்றதாகும் ஆற்றல்
பிராத்தி= விரும்பிய ஒன்றை அடைதலாகிய பெரும்பேறு
பிராகாமியம்= ஒன்றுக்கு மேலும் விரும்பிய பலவற்றையும் அடையும் பெரும்பேறு
ஈசத்துவம்= எல்லாவற்றிலும் மேன்மையாகும் தனிப்பெரும் பேறு
வசித்துவம்= எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி

அஜபை = மூச்சினை உள்ளிழுக்கும் போதும், வெளிவிடும் போதும் யோகிகள் உச்சரிக்கும் 'ஸோஹம், ஹம்ஸம்' எனும் ஹம்ஸ மந்திரம்.

யோகிகள் இந்த மந்திரத்தின் மூலம் மூச்சை வெளிவிடாமலும், உள்ளே சென்றுவிடாமலும் நடுவிலே அசையாமல் நிறுத்தி வைத்து, அட்டமாசித்திகளும், ஞானசித்தியும், கைவரப் பெற்று, சிவானந்தத் தேனில் திளைப்பார்கள் எனச் சொல்லுவர்.




அப்போது 'தான் யார்?' எனும் அறிவும் புலப்படுமாம்.




இவை அத்தனையும் கூடிவர ஞானமே உருவான கந்தன் அருளின்றி இயலாது!
இதனைத்தான் சூக்குமமாக ஸ்வாமிகள் இவ்வரிகளில் உணர்த்துகிறார்கள்.

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) July 23, 2007 10:25 PM  

//அட்டமா சித்திகள் = அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்//

அட்டமா சித்திகளின் எளிய விளக்கத்துக்கு நன்றி SK!

//அபயம் அபயம் கந்தா அபயம் /

அபயம் அபயம் என்று சூலமங்கலம் சகோதரிகள் பாடிடும் போது...அப்படியே அபயம் என்று கெஞ்சுவது போல் இருக்கும்!
நானும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன்!

அபயம் அபயம் கந்தா அபயம்
அபயம் அபயம் கந்தா அபயம்

VSK July 23, 2007 11:22 PM  

உண்மைதான் ரவி!

அவனல்லால், அபயம் வேறு எவன்?

வருகைக்கு நன்றி!

தி. ரா. ச.(T.R.C.) July 24, 2007 10:17 AM  

எனது நெடுநாளைய ஆசையை நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி
நல்ல சொல் விளக்கம்

VSK July 24, 2007 1:58 PM  

தாங்களும் வந்து சுவைப்பது மனதுக்கு இனிது!

நன்றி, திரு. தி.ரா.ச.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP