Tuesday, July 31, 2007

"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]


"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.

இந்தப் புனித கவசத்தை இங்கு அளிக்க அருள் புரிந்த ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்கும், நாமக்கல் சிபிக்கும், இதனைத் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் எனது நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) August 02, 2007 12:13 PM  

மிக்க நன்றி SK.
பதினோரு நாட்களும் பின்னூட்ட எதிர்பார்ப்புகள் எல்லாம் கடந்து,
முருகனருள் முன்னிற்க,
கவசம் இட்டு காத்து இருக்கீங்க!

இந்த வலையேற்றப் பணியால், வேலையேற்ற மணியன்-சுப்ரமணியன் அவனுக்கு என்றும் உவப்பாக இருக்கும்!

கவசத்தை முழுதா ஆத்திகம் வலைப்பூவிலும் கொடுத்திருக்கீங்க!
இதையும் விக்கி மூலத்தில் இணைத்து விடட்டுமா?

தி. ரா. ச.(T.R.C.) August 03, 2007 10:44 AM  

சொல்லச் சொல்ல இனிக்கும் குமரன் நாமம். படிக்கப் படிக்க இனிக்கும் கந்த குரு கவசம். இனிதே வழங்கியதற்கு நன்றி.

Unknown October 09, 2008 4:19 PM  

ஆஹா! கந்த குரு கவசத்தை தமிழில் கொடுத்ததற்கு நன்றி.
அதற்கு ஆங்காங்கே விளக்கம் கொடுத்தது அற்புதம்.
முருகன் படங்களும் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP