Thursday, July 26, 2007

07/27/07 "கந்தகுரு கவசம்" -- 7 [241-281]




"கந்தகுரு கவசம்" -- 7 [241-281]

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்


[எல்லாமே அன்புதான் என்பதை உணர்த்தும் அருமையான வரிகள்!
அனைவரும் இதனை உணர்ந்தால், கேள்விகள்தான் ஏது?]

1 comments:

Unknown August 22, 2013 2:43 AM  

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP