Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: Happy Birthday! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

வைகாசி பொறந்தாச்சு. மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?

பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்); அதில் ஒரு நடனக் காட்சி. ஆடுறவங்க பேர் எல்லாம் தெரியாது...
ஆனா அந்தப் பாட்டில், மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்!

இன்று வைகாசி விசாகம் (May 30, 2007)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு?
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்!
இறைவனின் திருவடிகள் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்!
அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் ஒரு அழகன்.
அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம சுப்பையா சாரைத் தான் கேட்கணும்)

உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்று திருப்புகழும் "விசாகன்" என்றே கொண்டாடுகிறது!
அவன் தான் விசாகன்-முருகன்!


அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு முருகா!

(பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!

ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)

சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)

படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா

Monday, May 21, 2007

கொஞ்சி கொஞ்சி வா குஹனே....

முருகனை பலவிதமான ரூபங்களில் பார்த்து அனுபவித்துள்ளார்கள் அவனது பக்தர்கள்.அதுவும் குழந்தை வடிவில் பாலமுருகனாக அழகு கொஞ்சும் தமிழில் வர்ணித்தவர் திரு பெரியசாமித் தூரன் அவர்கள்.இந்தப் பாட்டைக் கேட்டாலே முருகன் தவழ்ந்து வருவது போல இருக்கும்.கொஞ்சிக் கொஞ்சி முருகனை அழைத்து நம்மையெல்லாம் அவனிடமே கொண்டு சென்றுவிடுகிறார்.பாடல் நன்றாக இருந்தாலும் அதைப் பாடுபவரும் நன்றாக பாடவேண்டுமே. அந்தக் குறையும் இல்லாமல் நீக்குகிறார் திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ தன்
இனிய குரலில் அருமையாகப் பாடி.பாடலின் வரிகள் கீழே படிக்கவும்.
ராகம்:- கமாஸ் தாளம்:- ஆதி
பல்லவி

கொஞ்சி கொஞ்சி வா குஹனே
முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..)

அனுபல்லவி

அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச
கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..)

சரணம்

பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும்
அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும்
கொஞ்சி மகிழ் குமரா முருகா
அஞ்சுடர் வடிவேலா
தஞ்சம் உன்னை அடைந்தேன்
மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)


பாடலை கேட்க இங்கே "> கிளிக் செய்யவும்

Friday, May 18, 2007

கந்தன் காலடியை வணங்கினால்...!கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள் !


பாடல்: கந்தன் காலடியை வணங்கினால்
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்


நன்றி : கோ.கணேஷ்
துள்ளலான இசையோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல் இது.

Wednesday, May 16, 2007

சிங்கார வேலவன் வந்தான்


இன்று கிருத்திகை. முருகனைப் பற்றி நினைக்கவேண்டாமா? அவன் எப்பேற்பட்ட வேலவன். சிங்கார வேலவன். வேலவனா யார் இவன்? என்று கேட்டால் வேரிமலர்ப்பதமும் வேலும் அயிலும் மின்ன வெற்றி மயிலான் நிகர் அற்ற அழகன் இவன் என்றும் கூறலாம்.
முருகன் அருளில் அன்போடு அழைத்தால் எப்படி வருவான் தெரியுமா? படித்தும் கேட்டும்தான் பாருங்களேன்.
ராகம்:- ஆனந்தபைரவி தாளம்:- ஆதி

பல்லவி

சிங்கார வேலவன் வந்தான் எந்தனை ஆள
சிங்கார வேலவன் வந்தான் (சிங்கார)

அனுபல்லவி

பொங்காதர வோடு அடங்கா மகிழ்வோடும்
பெருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினியடை
துங்கவடிவினொடு (சிங்கார)

சரணம்

ஸ்கந்தன் பணியும் அன்பர் சொந்தன் கருணை கொள்
முகுந்தன் மருகன் முருகன்
முந்தன் வினை பயந்த பந்தந்தொலைத்து அருளை
இந்தா இந்தா என்று ஏழைகுடி முழுதும் வாழ
அருள்புரிய (சிங்கார)


என்ன ஒரு வார்த்தைஜாலம் பாருங்கள்
ஸ்கந்தன் சொந்தன் முகுந்தன் பந்தம் இந்தா இந்தா
யார் இந்த மாதிரி முருகனை அனுபவிக்க முடியும்?
நம்ப பாபநாசம் சிவன்தான் கொஞ்சு தமிழில் கொஞ்சுகிறார்
திருமதி. சௌமியா அவர்கள் தன் இனிய குரலில் பாடிய இந்தப் பாடலைக் கேட்க<"இங்கே கிளிக் செய்யவும்">

Sunday, May 13, 2007

043. தாய்ப்பால் கொடுத்தாள்குமரகுருபரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பாண்டி நாட்டில் பிறந்த தமிழ் முத்து. ஊமைக் குழந்தையாய் இருந்து திருச்செந்தூர் முருகப் பெருமான் அருளால் பேசவும் பாடவும் அருள் பெற்ற கவி. "பூமேவு செங்கமலம்" என்று தொடங்கும் கந்தர்கலி வெண்பா எழுதியவர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எழுதியவர். இவர் திருமலை மன்னருக்குச் சம காலத்தவர்.

கவியரசர் கண்ணதாசன்
ராதா ஜெயலட்சுமி
இவரைப் பற்றிய சிறிய வரலாற்றை ஆதிபராசக்தி என்ற திரைப்படத்தில் காட்டுகிறார்கள். முருகப் பெருமான் அருளால் அவர் பேசும் திறன் பெற்றதும் பாடும் பாடலே இந்தப் பதிவில் நாம் காணப் போகும் முருகனருள் பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்து ராதா(ஜெயலட்சுமி) அவர்கள் பாடிய அருமையான பாடல். (ராதா ஜெயலட்சுமி அவர்கள் தெய்வம் என்ற திரைப்படத்தில் திருச்செந்தூரில் போர் புரிந்து என்ற அருமையான பாடலையும் பாடியுள்ளார்கள்.)

சந்தநயம் மிகுந்து தமிழ்வளம் கொழிக்கும் இந்தப் பாடல் முருகன் அடியவர்கள் கேட்கவும் பாடவும் மிகப் பொருத்தமானது. இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம். அதற்கு cooltoadல் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். ஓசிதான். வைத்துக்கொள்ளுங்கள். அங்கு வேறு நிறைய நல்ல பாடல்களும் கிடைக்கின்றன.

தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணைத் தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்
வாய்ப்பாயால் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன் ஆடும் மயில் வேலன் அருள்

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
கலைஞானக் கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்


அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 01, 2007

காலமெல்லாம் இனிக்கும் காட்சி!

===========================================
காலமெல்லாம் இனிக்கும் காட்சி!

ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி காலமெல்லாம்
இனிய நினைவாக அவர்கள் மனதில் நிற்கும்.

ஆனால் முருகபக்தர்களுக்குக் காலமெல்லாம் மனதில்
நிற்கும் இனிய காட்சி ஒன்று உண்டு என்றால் அது
வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - முருகன்
அமர்ந்திருக்கும் காட்சிதான் என்பதில் எந்தவித
ஐயப்பாடும் இல்லை!

அப்படிப்பட்ட காட்சி ஒன்றை மனதை நெகிழ்விக்கும்
விதமாகக் கவிஞர் ஒருவர் பாடலாக்கிக்
கொடுத்துள்ளார். பாடலைப் பதிவிட்டுள்ளேன்.
அன்பர்கள் அனைவரையும் படித்துமகிழ வேண்டுகிறேன்!

-----------------------------------------------
"வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி


(வேல்வந்து)

பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி


பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி


வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!


(வேல்வந்து)"
--------------------------------------------------
பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP