Friday, April 13, 2007

தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!


=====================================================
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!

இன்று இனிய தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது!
தமிழ்க்கடவுள் தணிகைவேலனுக்கு
ஒரு தமிழ்ப் பாட்டைப் பதிவிட்டு மகிழ்கிறேன்
--------------------------------------------------------------------------------

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்!

ஆறெழுத்து மந்திரத்தை தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே - அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!

கந்தனடியை நினைத்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம்ஆறுமே - பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாறுமே!

இந்த அற்புதமான பாடலை எழுதியவர்:
திருமதி செளந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்
(மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின்
மாமியாராவார்கள் இந்த அம்மையார்)
=============================================
சர்வஜித்து ஆண்டு

வருகின்ற புதுவருடம் வளமாக இருக்கட்டும்
தருகின்ற நன்மையெல்லாம் தனமாக நிறையட்டும்
பெருகின்ற பொருளெல்லாம் பேருவை கொடுத்திடவே
அருகிருந்து உதவிடுவான் அழகுமயில் வேலவனே!

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

==================================

16 comments:

குமரன் (Kumaran) April 13, 2007 5:41 PM  

நான் சிறு வயதில் அடிக்கடி பாடி மகிழும் பாடல் ஐயா இது. அப்போது முழுதும் பொருள் புரியவில்லை. இப்போது புரிகிறது.

புத்தாண்டு வாழ்த்துகள் வாத்தியார் ஐயா.

Subbiah Veerappan April 13, 2007 9:52 PM  

பாடலில் இயற்கையாக அமைந்துவிட்ட சொற்கட்டமைப்பு
கேட்பவர்களை மெய்மறக்கவைக்கும் நண்பரே!

நன்றி!

உங்கள் நண்பன்(சரா) April 13, 2007 11:31 PM  

தலைப்பே அருமை ஐயா!நான் சிறுவயதில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்!

வாத்தியார் ஐயா அவர்களுக்கும் மற்றைய சகமாணர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.

தி. ரா. ச.(T.R.C.) April 13, 2007 11:55 PM  

புத்தாண்டில் நல்ல ஒரு முருகன் பாடலைத்தந்து வாழ்த்தியதற்கு நன்றி திரு. சுப்பையா அவர்களே

Subbiah Veerappan April 14, 2007 12:22 AM  

///உங்கள் நண்பன் அவர்கள் சொல்லியது: தலைப்பே அருமை ஐயா!நான் சிறுவயதில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்!///

நன்றி மிஸ்டர் சரவணன்.
பொங்கிவரட்டும் செல்வம் பதினாறுமே!

Subbiah Veerappan April 14, 2007 12:25 AM  

///தி.ரா.ச அவர்கள் சொல்லியது:
புத்தாண்டில் நல்ல ஒரு முருகன் பாடலைத்தந்து வாழ்த்தியதற்கு நன்றி திரு. சுப்பையா அவர்களே ///

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், நன்றி அய்யா!

சிவமுருகன் April 14, 2007 4:29 AM  

தக்கதொரு சமயத்தில் நல்லதொரு பாடலை தந்த உங்களுக்கும் அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) April 14, 2007 2:34 PM  

புத்தாண்டு வாழ்த்துக்கள் சுப்பையா சார்!

//வந்தனை செய்வோர்கள்
மனம்ஆறுமே
பொங்கிவரும் செல்வம்
பதினாறுமே//

நல்ல சந்தம் உள்ளதையா இப்பாடலில்!

அம்மையார் செளந்திரா கைலாசம் பல எளிய, இனிய பக்திப் பாடல்களையும் குழந்தைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
தேட வேண்டும் வலைத்தளத்தில் எங்குள்ளது என்று!

G.Ragavan April 23, 2007 2:53 PM  

ஆகா! அருமையான சந்தப் பாடல். இதைச் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். மிகவும் அருமை. தமிழ்ப் புத்தாண்டிற்குப் பொருத்தமாக பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. சௌந்தரா கைலாசம் அவர்கள் மிகச்சிறந்த கவிஞர். மரபில் புலமையுடையவர். அந்தத் திறமும் தமிழும் பாடலில் வெளிப்படுகிறது.

Subbiah Veerappan April 23, 2007 3:33 PM  

/// சிவமுருகன் அவர்கள் சொல்லியது: தக்கதொரு சமயத்தில் நல்லதொரு பாடலை தந்த உங்களுக்கும் அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்கள். ///

நன்றி நண்பரே!

Subbiah Veerappan April 23, 2007 3:36 PM  

///கே.ஆர்.எஸ் அவர்கள் சொல்லியது: அம்மையார் செளந்திரா கைலாசம் பல எளிய, இனிய பக்திப் பாடல்களையும் குழந்தைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
தேட வேண்டும் வலைத்தளத்தில் எங்குள்ளது என்று! //

வலைத்தளத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை! புததக வடிவில் உள்ளதா என்று சென்னைப் பதிப்பகங்களில் கேட்டுப் பார்த்தால் தெரியவரும். முயன்று பார்க்கிறேன் நண்பரே!

Subbiah Veerappan April 23, 2007 3:38 PM  

///ஜி.ரா அவர்க்ள் சொல்லியது: ஆகா! அருமையான சந்தப் பாடல். இதைச் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். மிகவும் அருமை. தமிழ்ப் புத்தாண்டிற்குப் பொருத்தமாக பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. சௌந்தரா கைலாசம் அவர்கள் மிகச்சிறந்த கவிஞர். மரபில் புலமையுடையவர். அந்தத் திறமும் தமிழும் பாடலில் வெளிப்படுகிறது. ///

மனம் உவந்து சொல்லியிருக்கிறீர்கள்
நன்றி மிஸ்டர் ஜி.ரா!

இலவசக்கொத்தனார் April 23, 2007 7:12 PM  

படிக்கும் போதே சந்தம், காவடி எடுத்துக்கிட்டு ஆடுதே! நல்ல பாடல்.

SP.VR. SUBBIAH April 23, 2007 9:21 PM  

///இலவசக்கொத்தனார் அவர்கள் சொல்லியது: படிக்கும் போதே சந்தம், காவடி எடுத்துக்கிட்டு ஆடுதே! நல்ல பாடல்.///

பாராட்டுக்கள் எல்லாம் அம்மையாரையே சேரும்! ந்னறி நண்பரே!

Geetha Sambasivam April 23, 2007 9:46 PM  

sariya pochu, ponga, puthu varusha posta? parthathum oru nimisham thikaichu poyiten. nalla post.

Subbiah Veerappan April 23, 2007 10:05 PM  

////கீதா சாம்பசிவம் said...
sariya pochu, ponga, puthu varusha posta? parthathum oru nimisham thikaichu poyiten. nalla post.
///

ஒருவார வெளியூர் பயணத்தின் காரணமாக, வந்திருந்த பின்னூட்டங்களுக்குத் தாமதமாகப் பதில் அளிக்க - அது மறுமொழியப்பட்டவை என்ற தலைப்பில் தமிழ்மணம் முகப்பில் வெளிவர அதனால் ஏற்பட்ட குழப்பம் சகோதரி!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP