Sunday, April 29, 2007

ஷண்முகநாதா சரணம்


சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டும் பணிந்தாலே போதும் என்கிறார் அருணகிரிநாதர். அதற்கே மனம் மகிழ்ந்து முருகன் அருள் பாலிப்பான். அப்படி இருக்கும்போது பழனி முருகனுக்கு பால்காவடி புஷ்பகாவடி,பன்னீர்காவடிகளை கால்நடையாகவே நடந்து எடுத்துச் செல்லும் பக்தர்கள் போடும் சரணங்கள் எத்தனை தெரியுமா.கேட்டுத்தான் பாருங்களேன்!

ஷண்முகநாதா ஷண்முகநாதா
ஷண்முகநாதா சரணம்
சரவண் பவனே சக்தியின் மகனே
ஷண்முகநாதா சரணம்

சித்திரை நிலவே தத்துவப் பொருளே
செண்பக மலரே சரணம்
செந்திலை ஆளும் சுந்தர வடிவே
சேவடி தொழுதோம் சரணம்

முத்திரைப் பவுனே வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே சரணம்
மூவிரு முகமே பூவிதழ் மனமே
முடிமணி தொழுதோம் சரணம்

செங்கனிச்சுவையே திங்களின் ஒளியே
சிரித்திடும் எழிலே சரணம்
சிந்தனைக் கடலே சந்தனக் குடமே
சீரடி தொழுதோம் சரணம்

பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே
பார்வதிமகனே சரணம்
பழனியம் பதியின் அழகிய மதியே
பணிவுடன் தொழுதோம் சரணம்

மங்கையர் கனவே சங்கரன் மகனே
மயிவா கனனே சரணம்
மங்கலம் தங்கிடப் பொங்கிடம் அருளே
மலரடி தொழுதோம் சரணம்

பங்கய மலரிதழ் தங்கிய திருவே
பரமனின் குருவே சரணம்
பன்னிரு விழியே புன்னகை மொழியே
பரிவுடன் அருள்வாய் சரணம்

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) April 30, 2007 12:58 AM  

திராச

பாடலை எழுதி அர்ப்பணித்தவர் யார்?
இப்படி சந்தம் கொஞ்சுகிறதே!
//பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே
பழனியம் பதியின் அழகிய மதியே//

சுவையிலும் சுவை தமிழ்ச் சுவை அன்றோ! அதனிலும் சுவை தமிழும் அவனும் சேர்தற் சுவை அன்றோ!

சிவமுருகன் April 30, 2007 2:59 AM  

பாட்டும் படமும் அருமை.

எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது.

நன்றி

G.Ragavan April 30, 2007 4:25 AM  

மிகவும் அருமையான பாடல். ரவியின் கேள்விதான் என்னுடையதும். இந்தப் பாடலை இயற்றியவர் யார்? சந்த நயம் ததும்பும் அழகிய பாடலை இயற்றியவர் யார்? இந்த அற்புதமான பாடலை அறியத் தந்தமைக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) April 30, 2007 6:23 AM  

@சிவமுருகன் நன்றி.எளிமையும் இனிமையும் யார் முருகந்தானே.

தி. ரா. ச.(T.R.C.) April 30, 2007 6:31 AM  

@ ரவி @ ராகவன் இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.கிரி ட்ரடிங் புத்தகக் கடையில் கந்தர் சஷ்டி கவசம் வாங்கினேன். அதில் இந்தப்பாட்டை போட்டு இருந்தார்கள். மனதுக்கு பிடித்திருந்ததால் அப்படியே அதை அளித்துவிட்டேன்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP