Thursday, April 05, 2007

தீராத வினையைத் தீர்ப்பதெது?

===========================================

தீராத வினையைத் தீர்ப்பதெது?

ஒரு பக்திச் சொற்பொழிவரங்கம்.

சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப்
பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு ; கரங்கள்
பன்னிரெண்டு. அறிவீர்கள்! கால்கள் எத்தனை?"

சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான்.

"கால்கள் இரண்டுதான்!"

"ஏன் காலகள் மட்டும் இரண்டு?"

அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு
அரங்கிலிருந்து பதில் இல்லை!

அவரே தொடர்ந்து சொன்னார்.

"பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச்
சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன்
பன்னிரெண்டு காலகள் இருந்தால் எந்த இரு
கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று
தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான்
ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும்,
கால்கள் இரண்டுதான்!"
--------------------------------------------------------------------------
நோய் என்பது தீர்க்ககூடியது. பிணி என்பது
தீர்க்க முடியாதது. நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணியை (chronic Disease)
குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்
குணப்படும்.

வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும்
இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம்
அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும்
முற்பிறவியில் நாம் செய்த செயல்

ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை
தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை
தன்னைச் சேர்க்கும் என்று துன்பத்தில் உழலும்
மனிதர்க்கெல்லாம் வழி காட்டும் முகமாக
கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய பாடலை
இன்று மகிழ்வுடன் பதிவிடுகிறேன்
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

-------------------------------------------------------------------------
பாடல் ஆக்கம்:: கவிஞர் திரு. வாலி
பாடியவர்:: திரு. T.M செளந்தர ராஜன்
இராகம்: மலையமாருதம்
தாளம்: ஆதி
-------------------------------------------------------------------------
பல்லவி

"ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

அநுபல்லவி

ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

சரணம்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

மாமனைப் போலிரு மாதுடன் கூடி
மாமலையில் பழமுதிர் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்து

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்"
----------------------------------------------------------------------

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

06.04.2007 5.45 A.M

14 comments:

குமரன் (Kumaran) April 05, 2007 8:56 PM  

காலம் காலமாகக் கேட்டாலும் திகட்டாத பாடல்களாக இட்டு வருகிறீர்கள் வாத்தியாரையா. பாடலின் ஒலி வடிவத்தை இந்த இடுகையிலும் இணைத்திருக்கிறேன்.

VSK April 05, 2007 11:23 PM  

சுவாமிமலை, சீரலைவாய், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருத்தணி, ஆவின்னன்குடி என ஆறு படை வீடுகளையும் இப்பாடலில் கொணர்ந்திருப்பது இதன் சிறப்பு!

நன்றி ஆசானே!

SP.VR. சுப்பையா April 06, 2007 12:21 AM  

//// (Kumaran) said...
காலம் காலமாகக் கேட்டாலும் திகட்டாத பாடல்களாக
இட்டு வருகிறீர்கள் வாத்தியாரையா. பாடலின் ஒலி
வடிவத்தை இந்த இடுகையிலும் இணைத்திருக்கிறேன்.///

நான் பழத்தையும் சர்க்கரையையும் கொடுத்தேன்,
நீங்கள் அதில் தேனையும், கற்கண்டையும் கலந்து
மிகுந்த சுவையுள்ளதாக்கிவிட்டீர்கள் குமரன்
(ஒலி வடிவத்திற்கு இணைப்புக் கொடுத்ததைத்தான்
சொல்கிறேன்.)

மிக்க நன்றி!

G.Ragavan April 06, 2007 12:24 AM  

கேட்டுக் கேட்டு உளமுருகி கண்ணீர் பெருகி அன்போடு முருகா முருகா என்று சிந்திக்கவும் செய்த அற்புதப் பாடல் இது. அதை அருமையான முறையில் அறிமுகம் செய்திருக்கின்றீர்கள். நன்றி. நன்றி.

அத்தோடு அந்தச் சொற்பொழிவு விளக்கம் மிக அருமை. ரசித்தேன்.

SP.VR. சுப்பையா April 06, 2007 12:25 AM  

////5:56 PM VSK said... சுவாமிமலை, சீரலைவாய், திருப்பரங்குன்றம்,
பழமுதிர்சோலை, திருத்தணி, ஆவின்னன்குடி என ஆறு படை
வீடுகளையும் இப்பாடலில் கொணர்ந்திருப்பது இதன் சிறப்பு!
நன்றி ஆசானே!///

சுவாமிமலையை முன் வைத்துக் கவிஞர் அந்த பத்தியைத்
துவங்கியிருப்பதினால்தான், படத்தையும் சுவாமிநாதன்
படமாகத் தேடிப் பதிவிட்டேன் வி. எஸ்.கே சார்

SP.VR. சுப்பையா April 06, 2007 12:32 AM  

///ஜி.ராகவன் அவர்கள் சொல்லியது: கேட்டுக் கேட்டு உளமுருகி
கண்ணீர் பெருகி அன்போடு முருகா முருகா என்று சிந்திக்கவும்
செய்த அற்புதப் பாடல் இது. அதை அருமையான முறையில்
அறிமுகம் செய்திருக்கின்றீர்கள். நன்றி. நன்றி.///

துன்பம் வாரத நிலை தன்னைச் சேர்க்கும் என்று எழுதினார் பாருங்கள்.
அதுதான் முத்தாயப்பான வரி!
எல்லா மனிதர்களும் விரும்பும் நிலைப்பாடு அதுதானே!
கவிஞர வாலி அவர்கள் அந்தக் காலத்திலேயே -
அவர் இளைஞராக இருந்த காலத்திலேயே
அதை உணர்ந்து எழுதியிருக்கிறார்!

ந்னறி மிஸ்டர் ஜி.ரா!

அந்த விள்க்க்ம் திரு.சுகி. சிவம் அவர்கள் சொன்னது!.

VSK April 06, 2007 12:44 AM  

//தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த//

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) April 06, 2007 1:22 AM  

//நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணி இறையருளால் தான் குணப்படும்//

சத்தியமான வார்த்தைகள் சுப்பையா சார்! அதனால் தான் பிறவிப் பிணி என்று சொல்கிறார்களோ!

அருமையான பாடல்.
அறுபடை வீடுகளின் வரிசை, பொதுவாகத் திருப்பரங்குன்றில் இருந்து தான் தொடங்கும்!

ஆனால் இந்தப் பாடலில், முருகன் உதித்ததில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை, கால வரிசையாக, அறுபடை வீடுகளை அடுக்குகிறார் வாலி! இதுவும் நல்ல ரசனை, சுவை தான்!

SP.VR. சுப்பையா April 06, 2007 8:25 AM  

/////VSK said... //தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த//
:))////

வி.எஸ்.கே சார் ஏதோ சொல்லவந்தவர், சொல்லாமல்
வெறும் சிரிப்பானைப் போட்டு முடித்து விட்டீர்களே - தகுமா?

SP.VR. சுப்பையா April 06, 2007 8:26 AM  

///// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணி இறையருளால் தான் குணப்படும்//

சத்தியமான வார்த்தைகள் சுப்பையா சார்! அதனால் தான் பிறவிப் பிணி என்று சொல்கிறார்களோ!////

வள்ளுவப் பெருந்தகைகூட இதைப் பற்றிச்
சிறப்பாக எழுதியுள்ளார்
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேரதார்"
- குறள் எண் 10
(இறைவனின் திருவடிகளை இடைவிடமல் நினைப்பவர்
பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பர். மற்றவர்
கடக்க முடியாமல் அதனுள் அழுந்துவர்)

///அறுபடை வீடுகளின் வரிசை, பொதுவாகத்
திருப்பரங்குன்றில் இருந்து தான் தொடங்கும்!
ஆனால் இந்தப் பாடலில், முருகன் உதித்ததில்
இருந்து நடக்கும் நிகழ்வுகளை, கால வரிசையாக,
அறுபடை வீடுகளை அடுக்குகிறார் வாலி!
இதுவும் நல்ல ரசனை, சுவை தான்!///

உண்மைதான் கே.ஆர்.எஸ் அவர்களே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) April 06, 2007 8:41 AM  

அண்ணா!
சொல்;பொருள்;இசை;குரல் என அப்பன் முருகன் அழகையும் அருளையும் கூறும் பாடல்.எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.

SP.VR. சுப்பையா April 06, 2007 9:54 AM  

///யோகன் பாரிஸ் அவர்கள் சொல்லியது: அண்ணா!
சொல்;பொருள்;இசை;குரல் என அப்பன் முருகன் அழகையும் அருளையும் கூறும் பாடல்.எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.//

பக்திப் பாடல்களின் சிறப்பே அதுதான!
கேட்பதற்கு அலுக்காது.

கோவி.கண்ணன் April 06, 2007 11:58 AM  

மிக அருமையான பாடல் ஐயவே !

SP.VR. சுப்பையா April 06, 2007 3:40 PM  

/// கோவியார் அவர்கள் சொல்லியது: மிக அருமையான பாடல் ஐயாவே ! ///

எப்போதும் முதலில் வருபவர், இன்று கடைசியாக் வந்திருக்கின்றீர்!:-)))

அருமை என்று சொன்னதால் வருகை பதிவேட்டில் டிக் செய்து விட்டேன்

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP