Sunday, April 29, 2007

ஷண்முகநாதா சரணம்


சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டும் பணிந்தாலே போதும் என்கிறார் அருணகிரிநாதர். அதற்கே மனம் மகிழ்ந்து முருகன் அருள் பாலிப்பான். அப்படி இருக்கும்போது பழனி முருகனுக்கு பால்காவடி புஷ்பகாவடி,பன்னீர்காவடிகளை கால்நடையாகவே நடந்து எடுத்துச் செல்லும் பக்தர்கள் போடும் சரணங்கள் எத்தனை தெரியுமா.கேட்டுத்தான் பாருங்களேன்!

ஷண்முகநாதா ஷண்முகநாதா
ஷண்முகநாதா சரணம்
சரவண் பவனே சக்தியின் மகனே
ஷண்முகநாதா சரணம்

சித்திரை நிலவே தத்துவப் பொருளே
செண்பக மலரே சரணம்
செந்திலை ஆளும் சுந்தர வடிவே
சேவடி தொழுதோம் சரணம்

முத்திரைப் பவுனே வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே சரணம்
மூவிரு முகமே பூவிதழ் மனமே
முடிமணி தொழுதோம் சரணம்

செங்கனிச்சுவையே திங்களின் ஒளியே
சிரித்திடும் எழிலே சரணம்
சிந்தனைக் கடலே சந்தனக் குடமே
சீரடி தொழுதோம் சரணம்

பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே
பார்வதிமகனே சரணம்
பழனியம் பதியின் அழகிய மதியே
பணிவுடன் தொழுதோம் சரணம்

மங்கையர் கனவே சங்கரன் மகனே
மயிவா கனனே சரணம்
மங்கலம் தங்கிடப் பொங்கிடம் அருளே
மலரடி தொழுதோம் சரணம்

பங்கய மலரிதழ் தங்கிய திருவே
பரமனின் குருவே சரணம்
பன்னிரு விழியே புன்னகை மொழியே
பரிவுடன் அருள்வாய் சரணம்

Thursday, April 26, 2007

முத்தமிழ் எப்போது பிறந்தது?


==========================================

முத்தமிழ் எப்போது பிறந்தது?

"முத்தமிழ் எப்போது பிறந்தது?" என்று கேட்டவுடன்
ஒரு கவிஞர் பதிலை எவ்வளவு அழகாகச்
சொல்கின்றர்ர் பாருங்கள்.

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தாராம்
முத்தமிழ் பிறந்ததாம்!
ஒரு சிறந்த பாடலைப் பதிவிடுகிறேன். படித்து இன்புற
வேண்டுகிறேன்
-------------------------------------------------------------------

வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
------வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
------பால்போல் தெரியுதடி
கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
------விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
------சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
------மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
------வேலனைத் தேடுதடி!
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
------முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
------திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
------ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
------பன்னிரு கைகளடி

பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா

Thursday, April 19, 2007

முருகனுக்கு ஒரு நாள் திருநாள்முருகனுக்கு ஒருநாள் திருநாள். ஆம் இன்று கார்த்திகைத் திருநாள்.
ஆமாம் இன்று திருமதி.தாரா நடராஜன் எழுதி திரு. ஒ.ஸ்.அருண் பாடிய இந்தப்பாடலைக்கேட்டுக் கொண்டு இருந்தேன்.மிக அருமையான பாடல்.
நீங்களும் படியுங்கள்.இசை வடிவத்தில் போட அனுமதியில்லை.
ராகம்:-- யமுனா கல்யாணி தாளம்:--ஆதி
பல்லவி
வர மனம் இல்லையா முருகா,,
வரம்தர மனம் இல்லையா என்னிடம்....(வர மனம்)
அனுபல்லவி
பிறவிப்பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன்மைந்தா குறைதீர்க்கும் குமரா... (வர மனம்)
சரணம்
வாழ்க்கை எனும் கடலிலே மூழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம் (வர மனம் இல்லையா)
இதில் சில உண்மைகள் உண்டு. இந்தப்பாட்டை கேட்டது உண்மை.
மேலே இடப்பட்டுள்ள முருகனின் பிரதிமை சிங்கப்பூரிலிருந்து இன்று என்னிடம் வந்தது உண்மை.இதை அனுப்பித்தவர் வேறு யாருமில்லை பிறைசூடன் மைந்தன் (சந்திரசேகரனின் மைந்தன்தான் ). முருகன் சிலை எனக்கு வேண்டும் எனற என் குறைதீர்த்த குமரன். பாடியவர் பெயரும் அருண்.அனுப்பியவர் பெயரும் அதேதான்
சரி இன்றையப் பாடலை பார்த்து,படித்து, கேட்ப்போமா.
ராகம்:-- சாவேரி தாளம்:- மிஸ்ர சாபு.
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உன்தன் உள்ளம் வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ( முருகா முருகா)
அனுபல்லவி
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்.. (முருகா)
சரணம்
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பே வடிவம்கொண்ட அய்யா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள்செய்வாய்
செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவனே...(முருகா முருகா)
என்ன ஒரு அழகான பாடல். பலமுறை சொல்லவேண்டாமாம். அவன் பெயரை ஒருதரம் சொன்னாலே போதுமாம் விரைவாக ஓடி வருவான் அருள்செய்ய. அன்பே வடிவம் கொண்ட அய்யா உனக்குகூட என் பிழையால் கோபம் வந்ததா.என் அந்தக் குறையைப் பெரிது படுத்தாமல் பொறுத்து அருள் செய்ய உள்ளம் உருகி வா முருகா திருச்செந்தூரில் இருப்பவனே என்று உள்ளம் உருகி வேண்டுகிறார் திரு. பெரியசாமி தூரன் அவர்கள். பாடல் அமைந்த ராகம் சாவேரி. இரக்கத்க்கென்றே பிறந்த ராகம் சாவேரி.உள்ளத்தை உருக்கி மனக்கவலையை போக்கவல்ல ராகம் இது.
மிக அழகாக இந்தப்பாடலை திருமதி.பம்பாய் ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்கள் பாடியுள்ளார்கள்
பாடலை கேட்க < "இங்கே கிளிக்"> செய்யவும்

Friday, April 13, 2007

தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!


=====================================================
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!

இன்று இனிய தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது!
தமிழ்க்கடவுள் தணிகைவேலனுக்கு
ஒரு தமிழ்ப் பாட்டைப் பதிவிட்டு மகிழ்கிறேன்
--------------------------------------------------------------------------------

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்!

ஆறெழுத்து மந்திரத்தை தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே - அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!

கந்தனடியை நினைத்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம்ஆறுமே - பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாறுமே!

இந்த அற்புதமான பாடலை எழுதியவர்:
திருமதி செளந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்
(மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின்
மாமியாராவார்கள் இந்த அம்மையார்)
=============================================
சர்வஜித்து ஆண்டு

வருகின்ற புதுவருடம் வளமாக இருக்கட்டும்
தருகின்ற நன்மையெல்லாம் தனமாக நிறையட்டும்
பெருகின்ற பொருளெல்லாம் பேருவை கொடுத்திடவே
அருகிருந்து உதவிடுவான் அழகுமயில் வேலவனே!

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

==================================

கந்தன் கருணை புரியும் வடிவேல்

வேலை வணங்குவதே நம் வேலை


==================================================================

உலகில் உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.
திருத்தணிகைக்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்டு.வலிய அசுரர்கள் மாளவும் நற்குணமுடைய தேவர்கள் வாழும்படியும் விரைந்து செல்லுகின்ற கூரிய வேலாயுதத்தை உடையவன் முருகன். எம்குலதெய்வமானஅந்த குன்றுதோறாடும் முருகனின் வெற்றி வேலைப் புகழ்ந்து பாடிய பாடல் இது.குஹனால் இயற்றப்பட்டது.
===================================================================
ராகம்:-பீம்பிளாஸ் தளம்:-தேசாதி


பல்லவி
கந்தன் கருணை புரியும் வடிவேல்

அனுபல்லவி

அருளொலியோடு ஆவி கலந்தே
அன்பும் ஆற்றலும் அறிவும் நயந்தே
இருசுகம் இருந்தே இடர்கள் களைந்தே
இன்புறச் செய்திடும் இறைவன் கைவேல்.....(கந்தன் கருணை...)

சரணம்

வெம்பகைகொல் வேல் வெற்றிதரும் வேல்
வேதப் பொருளை விளக்கும் மயில் வேல்
நம்பும் அடியார் நலம் வளர் கொள்வேல்
நங்கை வள்ளியின் திரு நாயகன் கை வேல்...(கந்தன் கருணை...)

குன்றுதோராடும் குமரன் அருள் வேல்
கோலமயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்
அணடம் வேண்டிடும் ஆதிமகள்
நம் அன்னை பராசக்தி அருட்சுடர் வேல்...(கந்தன் கருணை....)
====================================================================
இந்தப் பாடலை இயற்றியவர் திரு. குஹன் அவ்ர்கள். இதற்கு மெட்டமைத்து உயிர்கொடுத்ததும் பின்னர் அதைப்பாடி பிரபலப் படுத்தியவர் மறைந்த கான கலாதர, ஸ்வரஸாம்ராட்.திரு. மதுரை மணிஅய்யர் அவர்கள். அவர் இந்தப்பாட்டை பாடாத கச்சேரியே கிடையாது. அப்படியே அவர் பாடாவிட்டாலும் ரசிகர்கள் இதைக் கேட்காமல் கலைந்து போகமாட்டார்கள்.


அவர் பாடிய பாட்டை கேட்க இங்கே '><"கிளிக் செய்யவும்">

சர்வஜித்வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற வெற்றிவேல் முருகன் அருள்வான்
=========================================================================

Monday, April 09, 2007

36. சொல்லச் சொல்ல இனிக்குதடா!

சில பேரின் பேரைச் சொன்னாலே நமக்கு பத்திக்கிட்டு வரும்!
ஆனா பாருங்க, இங்க முருகப் பெருமான் பேரைச் சொல்லும் போது கூட, நமக்குப்
பத்திக்கிட்டு வருது = பத்தி(பக்தி) கிட்டும் வருது! :-)

சொல்லச் சொல்ல எப்படி ஒரு பொருள் இனிக்கும்?
திருப்பதி லட்டு ஒரு விண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்க!
எப்போது இனிக்கிறது? பட்டவுடன் சற்றே தான் இனிக்கிறது!

ஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,
ஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது!

அது போல, பெருமாளிடமோ, முருகனிடமோ, இறைவனிடமோ, முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி இல்லை, எல்லாம் கரைந்து விட்டோம் என்னும்படிக்கு, சுவை பற்றிக் கொள்கிறது!
தொடக்கத்தில் சும்மானாங்காட்டியும் அவன் பேரைச் சொன்னாலும்,
பின்பு அதுவே, சொல்லச் சொல்ல இனிக்குதடா!பாலராஜன் கீதா அனுப்பிய MP3 இங்கே!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா

(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
படம் : கந்தன் கருணை
இசை : K.V. மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
நடிப்பு: சாவித்திரி, ஜெமினி கணேசன்
இயக்கம்: ஏ.பி. நாகராஜன்

Thursday, April 05, 2007

தீராத வினையைத் தீர்ப்பதெது?

===========================================

தீராத வினையைத் தீர்ப்பதெது?

ஒரு பக்திச் சொற்பொழிவரங்கம்.

சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப்
பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு ; கரங்கள்
பன்னிரெண்டு. அறிவீர்கள்! கால்கள் எத்தனை?"

சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான்.

"கால்கள் இரண்டுதான்!"

"ஏன் காலகள் மட்டும் இரண்டு?"

அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு
அரங்கிலிருந்து பதில் இல்லை!

அவரே தொடர்ந்து சொன்னார்.

"பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச்
சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன்
பன்னிரெண்டு காலகள் இருந்தால் எந்த இரு
கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று
தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான்
ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும்,
கால்கள் இரண்டுதான்!"
--------------------------------------------------------------------------
நோய் என்பது தீர்க்ககூடியது. பிணி என்பது
தீர்க்க முடியாதது. நோயை (Disease) மருத்துவர்கள்
குணப்படுத்திவிடுவார்கள். பிணியை (chronic Disease)
குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்
குணப்படும்.

வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும்
இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம்
அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும்
முற்பிறவியில் நாம் செய்த செயல்

ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை
தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை
தன்னைச் சேர்க்கும் என்று துன்பத்தில் உழலும்
மனிதர்க்கெல்லாம் வழி காட்டும் முகமாக
கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய பாடலை
இன்று மகிழ்வுடன் பதிவிடுகிறேன்
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

-------------------------------------------------------------------------
பாடல் ஆக்கம்:: கவிஞர் திரு. வாலி
பாடியவர்:: திரு. T.M செளந்தர ராஜன்
இராகம்: மலையமாருதம்
தாளம்: ஆதி
-------------------------------------------------------------------------
பல்லவி

"ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

அநுபல்லவி

ஆராவமுதென அருள் மழை பெய்யும்
கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

சரணம்

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

மாமனைப் போலிரு மாதுடன் கூடி
மாமலையில் பழமுதிர் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்து

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்"
----------------------------------------------------------------------

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR. சுப்பையா

06.04.2007 5.45 A.M

Sunday, April 01, 2007

காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!

பழனியிலே இன்று பங்குனி உத்திரம்! வழியெங்கும் காவடிகள் காவடிகள்!
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்,
முருகா என்று ஓதுவார் முன்!
அது போல், பலகாலும், பார்க்கும் இடமெங்கும், காவடிக் கடலோ என்று எண்ணும் படிக்கு, அரோகரா, அரோகரா என்று காவடிகள் ஆட்டம்!

அதுவும் எத்தனை எத்தனை காவடிகள்!
பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி!
மேலும் பல காவடிகள் என்னென்ன என்று சொல்லி உதவுங்கள்!

தைப்பூசக் காவடிகளை மிஞ்சும் பங்குனி உத்திரக் காவடிகள்!

வலப் பக்கம் காவடி, இடப் பக்கம் காவடி!
முன்னே காவடி, பின்னே காவடி!
மேலே காவடி, கீழே காவடி!
இப்படி எங்கெங்குக் காணினும் காவடியடா!

குடும்ப பாரம் சுமக்கும் அன்பான எளிய மக்கள், இன்று அன்பு ஒன்றே சுமந்து எடுத்து வரும் காவடிகள்!
காவடியின் மகிமை தமிழகம் மட்டுமா பேசும்? ஈழம், சிங்கை, மலேசியா, இன்னும் தமிழ் இருக்கும் இடமெல்லாம் அல்லவா பேசும்!
இந்த இனிய நாளில், காவடிப் பாடல் ஒன்றைப் பாடி, காவடியானைப் போற்றுவோம்!

உன்னி கிருஷ்ணன் பாடுவது, இங்கே!

சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்

(ஜகம்=உலகம்; புய=புஜம்=தோள்; வரை=மலை
ஜகம் மெச்சிய மதுரமான கவிமாலை; அதைத் தன் மலை போன்ற அகன்ற தோளில் சார்த்திக் கொள்கிறான் முருகன்)

வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே

(கழுகாசலம்=கழுகு மலை; அந்த மலையின் பதியான முருகன் கோவிலின் வளத்தை நான் சொல்கிறேன் பெண்ணே!)

சன்னிதியில் த்வஜ ஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்

(த்வஜ ஸ்தம்பம் = கொடி மரம்; கும்பம்=குடம்; சலராசி=கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது )

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

(காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்கள் செவியையே சென்று அடைக்கும்!)

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.

(நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கி வருகிறார்கள்;
முருகக் கனலில் உருகிய மெழுகாய் வரும் பக்தர்கள் கதி காண்பார், இன்பம் பூண்பார்)


வரிகள்: அண்ணாமலை ரெட்டியார்
ராகம்: காவடிச் சிந்து
தாளம்: ஆதி

தமிழிசைக்குப் பெரும் பணி செய்தவர் அண்ணாமலை ரெட்டியார்.
அவரின் காவடிச் சிந்து பாடல்கள், மிகவும் புகழ் பெற்றவை. எளிய தமிழ்! அதே சமயம் துள்ளும் தமிழ்!
சென்னிக்குளம் அவர் சொந்த ஊர். அங்குள்ள முருகன் மேல் அவர் பாடிய சில பாடல்களில் அப்படியொரு சந்தம்!
பாடும் போதே, கால்கள் தானே ஆடி விடும்!

நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள் தெரியும், கால்கள் தானே ஆடுகிறாதா என்று! :-)
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் காக்கும் அடியா!

அரோகரா! அரோகரா!!


நீலக்கடல் ஓரத்திலே...
நீலக் கடல் ஓரத்திலே ஆலயம் அமைந்ததடி
கோலக் கிளிகள் குயில்கள் குமரா எனக் கூவுதடி(நீலக்கடல்)

வேலன் ஏறும் நீல மயில் நாலுவேதம் ஓதுமடி
பாலன் தன் தந்தை ஹரனுக்குபதேசம் செய்தானடி (நீலக்கடல்)

குறுநகை தவழும் குறுமுனி வதனம்
ஈராறு கரங்களும் இருள்வினை இருள் போக்கும்
குவலயம் போற்றிடும் குருபரன் சரணமடி
குறுநகை தவழ் வள்ளி குறத்தி மணவாளனடி
ஒருதரம் சரவண பவ வென உரைப்போர்க்கு
தருணமே குறை நீங்கி
இம்மை மறுமை பயன் அருள (நீலக்கடல்)

பதிவர் ஷைலஜா பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்தப் பாடலைப் பாடி அனுப்பினார்.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP