Saturday, March 31, 2007

கனிமொழியால் கற்றவை!

============================================

கனிமொழியால் கற்றவை!

இராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி
பாடியவர்: திரு.T.M.செளந்தரராஜன்
பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி

பல்லவி

"கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

அநுபல்லவி

அற்புதமாகிய அருட் பெரும் பொருளே
அருமறை தேடிடும் கருணையாம் கடலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!

சரணம்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின்செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே

கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும்
கந்தனே உனை மறவேன்!"

-----------------------------------------------------------------------
இன்று பங்குனி உத்திரம்.
அதோடு நிதியாண்டின் முதல் நாள்.
புதுக் கணக்கு எழுதப் பலர் பழநிக்குச் செல்வார்கள்.

எனக்கு எல்லாக் கணக்கும் அவரோடுதான்!
அந்தப் பழநியம்பதியில் தண்டாயுதத்துடன்
நிற்கும் பழநியாண்டவரோடுதான்.

அவர் புகழைப் பாடுவதும் மட்டும்தான்
என்வேலை. என்னுடைய வரவு செலவுகளை
யெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது!

அதனால் அவர் புகழ் பாடும் இந்தப் பதிவிற்கு
வந்து என் புதுக் கணக்கை மேற்கண்ட
பாடலுடன் துவக்கியுள்ளேன்.

முருகனருள் முன்னிற்கும் இந்தப்பதிவின்
வெளியில் நின்று இதுவரை அவர் புகழ்
பாடும் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தவனைக்
கதவைத் திறந்து உள்ளே விட்டு என்னையும்
முருகனின் புகழ் பாட அனுமதித்த
நண்பர் சிபி அவர்களுக்கு என் நன்றி!

அன்புடன்,
SP.VR..சுப்பையா
1.4. 2007

Friday, March 30, 2007

வா... முருகா... வா... வடிவழகா வா...


முருகனைப் பற்றிய பல பாடல்கள் இருந்தாலும் குறிப்பாக இந்தப் பாடல் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது ஏன் என்றால் அதற்கு காரணம் இரண்டு. ஒன்று இதை இயற்றியவர் மறைந்த என் நண்பர் திரு.' ஸ்பென்சர்' வேணுகோபால். மற்றொன்று மனதை மயக்கும் தமிழின் இனிமை.தமிழ்க்கடவுளான முருகனுக்கு அவர் அளித்த தமிழ்ச்சொல் மாலை இது.இந்தப் பாடலை கேட்ட பின்பும் அந்த முருகனுக்கு வர மனமில்லாமல்தான் இருக்குமா? அல்லது வரம் தரத்தான் மன்மில்லாமல் இருக்குமா?

இந்தப் பாடலுக்கு அமைத்திட்ட ராகமோ 'பேகடா' தாளமோ ருபகம்
பல்லவி

வா முருகா வா வடிவழகா ஷண்முகா வா வா (முருகா வா)

அனுபல்லவி

மாமறைப் பொருளே நீ வா வரையில்லாத அருளே வா
தேமதுரச் சுவையே வா தீரா என் வினை தீராய் வா .........(வா முருகா)

சரணம்

செய்தவப்பயனே சிவகுரு தெய்வமே நீ வா
சீலனே சிவகாமி பாலனே ஸ்ரீவள்ளிலோலனே வா
பொய்கைதரு மெய்ப்பொருளே போதஞான வேத சுடரே வா
புண்யதீன சரண்ய திவ்ய லாவண்ய ஸ்ரீசுப்ரமண்ய காருண்யா வா (வா )
(வா முருகா)
திருமதி எம்.எல். வஸந்தகுமாரி பாடிய படலைக் கேட்க இங்கே'><"கிளிக்"> செய்யவும்

Friday, March 23, 2007

031: குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!!!



குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் (குன்றத்திலே)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு வேல் வேல்!



பாடியவர்: ஏ.ஆர். இரமணி அம்மாள்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: தெய்வம்

Saturday, March 10, 2007

கலியுக வரதன் காட்சியளிப்பது பழனியிலே!



நண்பர் ப்ரசன்னா இப்பாடலை முருகனருள் பதிவில் இடுமாறு சொல்லி மின்னஞ்சலில் பாடல் வரிகளையும் பாடலின் சுட்டியையும் அனுப்பியிருந்தார். இப்போது தான் பதிவில் இட நேரம் கிடைத்தது. மிக அருமையான பாடல்.

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் (கலியுக)

பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள், சௌம்யா
ஆக்கம் : பெரியசாமி தூரன்
ராகம் : ப்ருந்தாவன சாரங்கா
தாளம் : ஆதி

Wednesday, March 07, 2007

சித்தம் இராங்கா தேனையா செந்தில் வேலையா..


கருணைகூர் முகங்கள் ஆறும் கொண்டவன் அல்லவா முருகன். அதனால்தான் மொத்த இரக்கமும் அவனிடத்தில் இறக்கம் கொண்டுள்ளது.ஆனாலும் தன் மேல் முருகன் இரக்கம் காட்டவில்லையே என்று திரு. பாபநாசம் சிவன் அவருடைய தனித்தமிழில் உள்ளம் உருகிப் பாடுகிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட ராகமும் இரக்கம் பற்றிய ராகமான ஸஹானா தான்.

ராகம்:- ஸஹானா தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

சித்தம் இரங்காதேனையா செந்தில்வேலையா--நின்....(சித்தம்)

அனுபல்லவி

சித்தம் இரங்கதேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின்.(சித்)

சரணம்

பக்தர்க் கிரங்கும் தீனபந்து என்றுன்னை நம்பி
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்று

உலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைத்துளி இருந்தால்
வையம் வியக்க ராமதாஸன் தன்னை ரக்ஷிக்க நின்...(சித்தம்)


திருமதி.சௌமியா அவர்கள் பாடிய இந்தப்பாட்டை கேட்க இங்கே "> <'கிளிக்"> செய்யவும்
திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிய இந்தப் பாடலைக் கேட்க இங்கே"'><"கிளிக்>" செய்யவும்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP