Tuesday, September 11, 2007

உள்ளம் உருகுதைய்யா! உன்னடி காண்கையிலே!

சென்னையில் மேகலா தியேட்டரில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.
ஆனால் எந்தப் படமானாலும் சரி, அன்றைய விளம்பரம், காட்சி இவை எல்லாம் தொடங்கும் முன்னர், ஒரு பாடல் ஒலிக்க விடுவார்கள்! அது ஒலித்துக் கொண்டே தான் திரைச்சீலையும் மேல் எழும்பும்!
அது "உள்ளம் உருகுதய்யா"!

சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் மேல் மாடி. அப்போ, வாடகை வீட்டில் குடியிருந்த காலம். உறவினர்கள் வந்து விட்டால், வீட்டுக்குள் நடக்க முடியாது! நிற்கத் தான் வேண்டும்!
ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க...அப்போதே திருக்கோவிலூர் ஆழ்வார்களின் அனுபவமோ என்னவோ, எனக்கு அந்தத் தானா தெருவில்! :-) வேண்டுமென்றால் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்ளலாம்!

மழை பெய்தால் சில்லென்று வீட்டுக்குள் சாரல் அடிக்கும்! ஆனால் மழை தான் அப்போது பெய்யவில்லையே! தண்ணீர் கஷ்டம் சென்னையின் சொத்தாயிற்றே அப்போது!
வாளியிலும் குடத்திலும் தண்ணீர் பிடிப்பது பெரும் பிரச்சனை என்றால், அதை விடக் கஷ்டம், குடத்தை மாடியில் ஏற்றுவது! படிக்கட்டில் ஏற்ற ஏற்ற பெண்டு கழண்டி விடும்!

அப்போது கஷ்டம் தெரியாமல் கைகொடுத்த பாடல் என்றால் அது இது தான்! தோளில் குடத்தை வைத்துப் படியேறும் போது, "வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா" ன்னு ஒலிக்கும் பாருங்க...கிடுகிடு என்று படியேறி விடுவேன்! :-)

அப்போது தான் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிலோனில் இருந்து Sharp டேப் ரிக்கார்டர் வாங்கி வந்து கொடுத்த காலகட்டம்! குடும்பத் தெய்வமான முருகப் பெருமான் பாடல்கள் தான் பெரும்பாலும் டேப்பில் பதிவு செய்வார்கள், அம்மாவும் அப்பாவும்!
TDK-90, TDK-60 என்று விதம் விதமான டேப்புகள்!
நான் கேட்கும் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி படப் பாடல்களைப் பதியாமல், எப்ப பார்த்தாலும் முருகன் பாட்டையே பதிஞ்சா, எனக்குக் கோபம் வராதா என்ன? :-)

அதுவும் ஒவ்வொரு டேப்பிலும், "உள்ளம் உருகுதைய்யா" என்று தான் தொடங்கும்! இப்படி ஒரே பாட்டை எல்லா டேப்பிலும் பதியறீங்களே-ன்னு சண்டை போட்ட காலம் எல்லாம் உண்டு!
ஒரு முறை ஸ்ரீதேவி பாடும் "வடிவேலன் மனசை வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி" என்கிற பாட்டு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது! அதை நானும் காசெட்டில் ரெக்கார்ட் செய்து விட்டேன்! அப்புறம் தான் தெரியும், நான் அப்படிப் பதிஞ்சது "உள்ளம் உருகுதைய்யாவின்" மேலேயே என்று!

விஷயம் தெரிஞ்சி, வீட்டில் அப்பா என் மேல் பதியோ பதி என்று பதிய, ஒரே கலாட்டா! அப்பறம் பாட்டி வந்து "வடிவேலன் மனச வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா!
அதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க-ன்னு பாட்டின் விவரம் தெரியாமல் என்னைச் சப்போர்ட் செய்ய,
வீடே கொல்லென்று....சிரிக்க...

வீடுகள் வெறும் செங்கற்களால் கட்டப்படுகின்றன!
இல்லமோ இனிய இதயங்களால் கட்டப்படுகின்றன!!

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், முருகப் பெருமானோடு சேர்ந்து, பழைய நினைவுகளும் இனிக்கும்!டி.எம்.எஸ் மிகவும் உருகிப் பாடிய பாட்டுகளில் இது மிகவும் பிரபலமான பாடல். ஆரம்ப இசையே அமர்க்களமாய்த் தொடங்கும்! மெலிதான இசை மட்டுமே பின்புலத்தில்! வயலின்-வீணை இவற்றோடு தாளக் கட்டை! ஒவ்வொரு பீட்டிலும், தாளம் தட்ட தட்ட, நம் மனத்தையே தட்டுவது போல இருக்கும்!

எழுதியவர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. சிலர் தண்டபாணி தேசிகர் என்றும் சொல்கிறார்கள்! சிலர் வாலி என்றும் சொல்கிறார்கள்! அறிந்தவர் சொல்லுங்கள்!
(பிற்சேர்க்கை: ஆண்டவன் பிச்சை (எ) முருகப் பெண் துறவியே இப்பாடலை எழுதியது!)
பாடலைக் கேட்டு உருக, இங்கே சொடுக்கவும்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா....

(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா

(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா

(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

(உள்ளம் உருகுதய்யா)
ஈழத்தில், நல்லைக் கந்தசுவாமி ஆலயத்தில் நடக்கும் திருமஞ்சத் திருவிழா! மஞ்சள் ஜொலி ஜொலிப்பில் ஜொலிக்கும் முருகப் பெருமானின் திருவுருவப் படங்கள் என்று நண்பர் கானா பிரபா, தமது பதிவில் ஒவ்வொரு நாளும் விழாவாக இடுகிறார். இதுவரை காணவில்லை என்றால், ஓடிப் போய் கந்தனைக் காணுங்க! இதோ...

33 comments:

கோவி.கண்ணன் September 10, 2007 10:39 PM  

பாடலும், இசையும் ஒருங்கே உருகி இணைந்து செளந்தராஜன் குரலில் மேலும் உருக்கம் கொடுக்கும் பாடல்தான். நெஞ்சின் நினைவலைகளில் இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

எழுதியவர்,இசையமைத்தவர், பாடியவர் மூவருமே சரியாக செய்திருக்கிறார்கள்

வடுவூர் குமார் September 10, 2007 11:28 PM  

"கணீர்" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல் .்

கானா பிரபா September 10, 2007 11:43 PM  

மண்ணானாலும் பாடலைப் போல எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாட்டு இது, பதிவுக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி கண்ணபிரான் ரவிஷங்கர்

பராசரன் September 11, 2007 1:19 AM  

உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல் இது. இசையென்றால் கல்லும் கரையும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அதுவும் அந்த இரண்டாவது சரணத்தில் பாசம் அகன்றதய்யா என்று பாடி "பந்த பாசம் அகன்றதய்யா" என்று பாடும்போது அவன் திருவடியில் சரணடைந்து விடவே தோன்றும். (அதற்கு அடுத்து வரும் வார்த்தை 'உந்தன்மேல்' என்று நினைக்கிறேன் 'என் நெஞ்சில்' என்று இங்கே வந்திருக்கிறது).

அருமையான பாடல் TMS அவர்களில் குரலில்.

ஒரு உபரித் தகவல். இதை எழுதியவர் 'எக்ஸ் மச்சி ஒய் மச்சி' எழுதிய நம்ம வாலிதான் ;-)

மதுரையம்பதி September 11, 2007 2:49 AM  

மனதிற்கினிய பாடல்.....நன்றி கே.ஆர்.எஸ்

நாகை சிவா September 11, 2007 3:37 AM  

உள்ளத்தை உருக வைக்கும் பாடல் தான்...

மலைநாடான் September 11, 2007 4:32 AM  

ரவிசங்கர்!

பாடலுக்கும் பதிவுக்கும் நன்றி.

//"கணீர்" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல் .//

எங்க ஊரிலும்தாங்க.

//ஒரு உபரித் தகவல். இதை எழுதியவர் 'எக்ஸ் மச்சி ஒய் மச்சி' எழுதிய நம்ம வாலிதான் ;-)//

அடடா..:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) September 11, 2007 6:27 AM  

நிஜமாகவே உள்ளத்தை உருக வைத்த பாடலய்யா இது.. அதுவும் விடியற்காலை 5.30 மணிக்கு தெருக் கோடி கோவிலில் ஒலிக்கும் பாருங்கள்.. இந்தப் பாடல்.. கேட்க கேட்க முருகனைத் தேடி ஓடிவிடு என்று விரட்டும்.. பாடலும், இசையும், பாடியவரின் உருக்கமான குரலும்.. அடடா.. இந்த பக்தி இசையை கேட்கும் பக்தகோடிகள் அல்லாதவர்களையும் உருக வைத்த பாடல் இது..

முருகா.. முருகா.. முருகா.. நாடி வருகிறேன். ஏற்றுக் கொள்..

Sathia September 11, 2007 2:09 PM  

பின்றீங்களே ரவி,
எல்லோரும் பாட்டின் மகிமையில் உங்க பதிவ விட்டுட்டாங்க.

\\ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க...அப்போதே திருக்கோவிலூர் ஆழ்வார்களின் அனுபவமோ என்னவோ, எனக்கு \\
கண்ணபிரான் டச் ;-)

\\வடிவேலன் மனச வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா!
அதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க\\
நல்ல நகைச்சுவை

அருமையான பாடலை பகிர்ந்ததற்கு நன்றிகள் பல

சத்தியா

வல்லிசிம்ஹன் September 11, 2007 2:31 PM  

Thanks Ravi.
how many years have passed by listening to this song...
but was it written by Vaali. I thought it was Smt.Sanyasini Andavan Pichai?
even now manasu sanjalamaaka irukkumbothu intha 16 paattu CD pottu vittaal pothum.
manathu Nilaippadum.

G.Ragavan September 11, 2007 2:44 PM  

எப்பேற்பட்ட பாடல் இது. கேட்கக் கேட்க உள்ளம் உருகுதய்யா! முருகா!

முருகன் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் என்று முத்திரையைப் பதித்துவிட்டார்.

ஒரு பாடலா? இரு பாடலா? எத்தனையெத்தனை முத்துகள். கேட்டுக் கேட்டுச் சுகிக்க.

பாடலை நினைவூட்டிய நண்பர் ரவிக்கு நன்றி.

குமரன் (Kumaran) September 11, 2007 4:57 PM  

இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்ட போது சிபி இந்த டி.எம்.எஸ். பாடல்களை எல்லாம் (குறிப்பாக இந்த உள்ளம் உருகுதையா பாடலை) பதிக்க வேண்டும் என்று தான் தொடங்கினார் என்று நினைக்கிறேன். இப்போது ஒவ்வொன்றாக இந்தப் பாடல்கள் வருகின்றன. :-)

இன்று காலையில் கூட சிற்றுந்தில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு வந்தேன்.

இரவிசங்கர். நல்லா கதை சொல்லியிருக்கீங்க. திருக்கோவிலூர், குடத்தை படிகளில் ஏற்றுவது என்று நன்றாக இருக்கிறது. :-) வடிவேலன் மனசை வச்சா முருகன் பாட்டுன்னு தானே நெனைச்சுக்கிட்டு இருந்தேன். இல்லையா? :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) September 11, 2007 5:25 PM  

ரவிசங்கர்!
இந்தப் பாடல் பிடிக்காதவர் அரிது.
யாழ்ப்பாணத்தில் வின்சர் எனும் திரையரங்கும் பத்திப்பாடல் போடும்
அவர்கள் இந்தப் பாடலும் போடுவார்கள்.
இப்படியான பாடல்கள் இன்று உருவாக்குவார் இல்லாமல் போய்விட்டதே!!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:32 PM  

//கோவி.கண்ணன் said...
எழுதியவர்,இசையமைத்தவர், பாடியவர் மூவருமே சரியாக செய்திருக்கிறார்கள்//

உண்மை GK!
TMS-MSV பற்றிச் சொல்லவே வேண்டாம்! வாலி வேறா?
உருக்கம்! முருகா என்றது உருகாதா மனம்?

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:34 PM  

//வடுவூர் குமார் said...
"கணீர்" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல்//

ஆமாங்க குமார் சார். முதலில் சென்னை மேகலா என்று தான் நினைத்தேன். தஞ்சை கரந்தையில் ஸ்ரீநிவாசா டாக்கீஸ்-இலும் கூட இதைக் கேட்டேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:35 PM  

// கானா பிரபா said...
மண்ணானாலும் பாடலைப் போல எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாட்டு இது, பதிவுக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி கண்ணபிரான் ரவிஷங்கர்//

மண்ணானாலும் இன்னும் முருகனருளில் இடவில்லை! நீங்க சொன்னதும் பாருங்க! இட்டு விடுகிறோம் பிரபா!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:43 PM  

//பராசரன் said...
இசையென்றால் கல்லும் கரையும் என்று சும்மாவா சொன்னார்கள்.//

வாங்க பராசரன்
இதை ஜிரா-விடம் சொன்னீங்க என்றால் "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று அநுபூதி பாடிடுவார், தான் இன்குரலில்.

//அதுவும் அந்த இரண்டாவது சரணத்தில் பாசம் அகன்றதய்யா என்று பாடி "பந்த பாசம் அகன்றதய்யா" என்று பாடும்போது அவன் திருவடியில் சரணடைந்து விடவே தோன்றும்//

உண்மை! உண்மை!

//அதற்கு அடுத்து வரும் வார்த்தை 'உந்தன்மேல்' என்று நினைக்கிறேன் 'என் நெஞ்சில்' என்று இங்கே வந்திருக்கிறது//

நீங்கள் சொன்னது சரியே! உந்தன் மேல் என்று தான் வருகிறது! பதிவிலும் மாற்றி விடுகிறேன்! நன்றி பராசரன்!

//ஒரு உபரித் தகவல். இதை எழுதியவர் 'எக்ஸ் மச்சி ஒய் மச்சி' எழுதிய நம்ம வாலிதான் ;-) //

ஜாலி வாலி, நீலியின் மகன் மேல் எழுதியதா! அருமை! அருமை!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:45 PM  

//மதுரையம்பதி said...
மனதிற்கினிய பாடல்.....நன்றி கே.ஆர்.எஸ்//

ஆமாம் மெளலி சார்! மனதிற்கு இனியவன் மேல் மனதிற்கு இனிய பாடல் தான்!

//நாகை சிவா said...
உள்ளத்தை உருக வைக்கும் பாடல் தான்...//

தனிமையில் கேட்கும் போது, இன்னும் நெகிழும் சிவா!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:47 PM  

// மலைநாடான் said...
//"கணீர்" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல் .//
எங்க ஊரிலும்தாங்க.//

ஈழமும் முருக பக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாயிற்றே!

நன்றி மலைநாடான் ஐயா!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:50 PM  

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அதுவும் விடியற்காலை 5.30 மணிக்கு தெருக் கோடி கோவிலில் ஒலிக்கும் பாருங்கள்.. இந்தப் பாடல்/

கரெக்டாச் சொன்னீங்க உண்மைத் தமிழன்! சிற்றஞ்சிறு காலையில் கேட்ட நாளெல்லாம் இனிய நாளே!

//முருகா.. முருகா.. முருகா.. நாடி வருகிறேன். ஏற்றுக் கொள்..//

நாடி வந்தார்க்கு நல்லறம் புகட்டி நன்செய்து காப்பான கந்தன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:53 PM  

// Sathia said...
பின்றீங்களே ரவி,
எல்லோரும் பாட்டின் மகிமையில் உங்க பதிவ விட்டுட்டாங்க//

ஹிஹி! வாங்க சத்தியா!
பாட்டின் மகிமை முன் பதிவு கால் தூசு பெறுமா?

\\வடிவேலன் மனச வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா!
அதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க\\
நல்ல நகைச்சுவை//

பாட்டி பண்ண நகைச்சுவை! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:55 PM  

// வல்லிசிம்ஹன் said...
Thanks Ravi.
how many years have passed by listening to this song...
but was it written by Vaali. I thought it was Smt.Sanyasini Andavan Pichai?//

ஆகா திருமதி ஆண்டவன் பிச்சை என்று இன்னொரு பெயரைச் சொல்லறீங்களே வல்லியம்மா! இருங்க ஊருக்கு ஒரு ஃபோன் போட்டுக் கேட்டுக்கறேன்!

//even now manasu sanjalamaaka irukkumbothu intha 16 paattu CD pottu vittaal pothum.
manathu Nilaippadum//

எளிய தமிழில் இனிய முருகன் பக்தி! அது தான் மகிமை!

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 7:58 PM  

// G.Ragavan said...
எப்பேற்பட்ட பாடல் இது. கேட்கக் கேட்க உள்ளம் உருகுதய்யா! முருகா!

பாடலை நினைவூட்டிய நண்பர் ரவிக்கு நன்றி.//

ஜிரா
உண்மையச் சொல்லணும்னா, உங்களை நினைச்சிக்கிட்டுத் தான் இதை பதிவிட்டேன்! எப்படி நம்ம ஜிரா இந்தப் பாட்டை இவ்வளவு நாள் இடாமல் இருந்தார்-னு தோணிச்சு!
ஒரு வேளை பாட்டைக் கேட்டவுடன், பதிவில் கூட கவனம் செலுத்தாம அப்படியே உருகி உட்கார்ந்துட்டாரோ-ன்னு நினைச்சேன்!

உண்மையச் சொல்லுங்க! இந்தப் பாட்டை எத்தனை தரம் கேட்டீங்க? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 8:06 PM  

//குமரன் (Kumaran) said...
இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்ட போது சிபி இந்த டி.எம்.எஸ். பாடல்களை எல்லாம் (குறிப்பாக இந்த உள்ளம் உருகுதையா பாடலை) பதிக்க வேண்டும் என்று தான் தொடங்கினார் என்று நினைக்கிறேன். இப்போது ஒவ்வொன்றாக இந்தப் பாடல்கள் வருகின்றன. :-)//

மேலும் வரவேண்டும், வரவேண்டும்! குமரன்!

//இன்று காலையில் கூட சிற்றுந்தில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு வந்தேன்//

சிற்றுந்து=கார் 4 door
சிற்றஞ் சிற்றுந்து=கார் 2 door?
:-))
இருங்க மினி வேனுக்கு யோசிக்கறேன்!

//நல்லா கதை சொல்லியிருக்கீங்க. திருக்கோவிலூர், குடத்தை படிகளில் ஏற்றுவது என்று நன்றாக இருக்கிறது. :-)//

அச்சோ...விடிய விடிய, தண்ணிக் குடத்தைத் தோளில் தூக்கிய காலமெல்லாம் இப்ப நினைச்சா...ஒரு மாதிரி ஆயிடும் குமரன்! மொத்த வீடுமே பதினைந்து குடம் தண்ணிக்கு ஆலாய்ப் பறக்கும்!

//வடிவேலன் மனசை வச்சா முருகன் பாட்டுன்னு தானே நெனைச்சுக்கிட்டு இருந்தேன். இல்லையா? :-)//

இருங்க! வெட்டிப்பயல் பாலாஜியைக் கேட்டுச் சொல்லறேன்! அடுத்த கலாட்டா பத்திகளை எல்லாம் பக்திகள் ஆக்க அவரால் தான் முடியும்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) September 11, 2007 8:09 PM  

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவிசங்கர்!
இந்தப் பாடல் பிடிக்காதவர் அரிது.
யாழ்ப்பாணத்தில் வின்சர் எனும் திரையரங்கும் பத்திப்பாடல் போடும்
அவர்கள் இந்தப் பாடலும் போடுவார்கள்.//

மலைநாடான் ஐயாவும் சொல்லியிருக்கார் பாருங்க அண்ணா!
இது துவக்கப் பாடலாக இடம் பிடித்துக் கொண்டதில் வியப்பே இல்லை!

//இப்படியான பாடல்கள் இன்று உருவாக்குவார் இல்லாமல் போய்விட்டதே!!//

காலம் வரும் யோகன் அண்ணா!
கந்தன் கருணை இருந்தா, யார் கண்டது, நம்மில் ஒருவரே கூட இது போன்ற பாடல்களை அடுத்த தலைமுறைக்கு எழுதி வைக்கும் காலம் வரலாம்!

குமரன் (Kumaran) September 11, 2007 9:51 PM  

//சிற்றஞ் சிற்றுந்து//

பார்த்து இரவிசங்கர். யாராவது வந்து 'சின்ன + சிறு = சின்னஞ்சிறு' தான் சிற்றஞ்சிறு இல்லை; நீ எல்லாம் தமிழில் எழுத வந்துவிட்டாய்; தமிழ் கற்றுக்கொடுக்க வந்துவிட்டாய் என்று திட்டப்போகிறார்கள். சிற்றஞ்சிறுகாலே என்று எழுதி நான் அந்தத் திட்டு வாங்கியிருக்கிறேன். :-)

delhimantran September 11, 2007 9:54 PM  

திருப்பரங்குன்றத்தில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கோயிலில் கேட்ட பாடலிது.
நான் ரசித்து(உருகி),என் பையன்கள்(மூவர்)ரசித்து,நாளை என் பேரப்பிள்ளைகளாலும் ரசிக்கப்பட போகும் சாகாவரம் பெற்ற பாடலிது.
நன்றி கண்ணபிரான்.

மடல்காரன் September 13, 2007 9:05 AM  

முருகனின் பாட்டு
மால் மருகனின் பாட்டு
இதயத்தில் இதை போட்டு
துன்பத்தை எல்லாம் பூட்டு
மனம் மகிழும் கேட்டு
வருவான் வ்டிவேலன் இதை கேட்டு

நன்றி கண்ணபிரான் ரவிசங்கர்

kannabiran, RAVI SHANKAR (KRS) September 13, 2007 9:27 PM  

//குமரன் (Kumaran) said...
//சிற்றஞ் சிற்றுந்து//

பார்த்து இரவிசங்கர். யாராவது வந்து 'சின்ன + சிறு = சின்னஞ்சிறு' தான் சிற்றஞ்சிறு இல்லை//

ஓகோ! ஞாபகம் வந்திடிச்சி! :-)))
பரவாயில்லை குமரன்...சிற்றஞ் சிறு கிள்ளை மொழியால் சொல்லிட்டுப் போகட்டும்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) September 13, 2007 9:28 PM  

//delhimantran said...
திருப்பரங்குன்றத்தில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கோயிலில் கேட்ட பாடலிது.
நான் ரசித்து(உருகி),என் பையன்கள்(மூவர்)ரசித்து,நாளை என் பேரப்பிள்ளைகளாலும் ரசிக்கப்பட போகும் சாகாவரம் பெற்ற பாடலிது//

ஆமாங்க..சாகாவரம் பெற்ற பாட்டு தான்..ஐயமே இல்லை! பேரப் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) September 13, 2007 9:29 PM  

//மடல்காரன் said...
முருகனின் பாட்டு
மால் மருகனின் பாட்டு
இதயத்தில் இதை போட்டு
துன்பத்தை எல்லாம் பூட்டு
மனம் மகிழும் கேட்டு
வருவான் வ்டிவேலன் இதை கேட்டு//

ஆகா
அடுக்கு மொழியில்
சொடுக்கி ஆடும்
மிடுக்கு மடலார்
நெடுக்கு வாழி!

Narayanan September 01, 2009 3:38 PM  

Mathaji Andavan Pitchai's immortal song is brought to life by TMS and it's origin at Mother Kalikamba's Temple at Thambu Chetty Street,George Town, Chennai are all divinely ordained! Hail Lord Muruga!

Anonymous November 19, 2009 11:51 PM  

[url=http://firgonbares.net/][img]http://firgonbares.net/img-add/euro2.jpg[/img][/url]
[b]microsoft video software, [url=http://firgonbares.net/]Mac Poser[/url]
[url=http://firgonbares.net/][/url] discount ms office software adobe photoshop cs3 for mac
discounts software [url=http://firgonbares.net/]Mac FileMaker Server[/url] coreldraw x4 key gen
[url=http://firgonbares.net/]macromedia dreamweaver 8 software[/url] dreamweaver software for sale
[url=http://firgonbares.net/]academic software downloads[/url] student discount on microsoft office
to buy linux software [url=http://firgonbares.net/]nero lite 9[/b]

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP