Wednesday, December 12, 2007

"தல" பில்லா 2007! முருகப் பெருமான் குத்துப்பாட்டு!!

தல பில்லா படம் இதோ நாளைக்கு ரிலீசாகப் போகுது! முருகனருள் வலைப்பூவில் ஒரு குத்துப்பாட்டு போட்டா முருகன் கோவிச்சுக்குவாரா என்ன?
பில்லா 2007 படத்தில், "சேவல் கொடி பறக்குதடா"-ன்னு இந்த முருகன் பாட்டைக் கேட்டவுடன், என் மனசு ஜிவ்வுன்னு ஒரே உசரத்துக்குப் போயிடிச்சி!

பாட்டின் வரிகளை இணையத்தில் தேடினேன்...கிட்டவில்லை!
சரி, நாமளே உக்காந்து எழுதிடுவோம்-னு கேட்டுக் கேட்டு எழுதிட்டேன்!
அப்படியே மனப்பாடமா ஆகிப் போச்சு! - பின்னே வூட்டுல யாருக்கும் தெரியாம, கதவை சாத்திப்புட்டு, வால்யூமை ஃபுல்லா ஏத்தி வச்சி, ஆடு ஆடு-ன்னு ஆடிக்கிட்டே எழுதினேன்-ல! மனப்பாடம் ஆகாம என்ன செய்யும்? :-)

பால் வடியும் பால முகம், அமைதியான பையன் (அட...என்னைப் போலவே) - இப்படி எல்லாம் பேரு எடுத்த விஜய் ஏசுதாஸ் என்னமா குத்துப்பாட்டைக் குத்திக் குத்திப் பாடுறான்!
எலே, ஏசுதாஸ் பய புள்ள! கலக்கிட்ட போ! ஒன் கச்சேரி பாட்டையெல்லாம் கேட்டிருக்கேன். அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடப் போகுது இந்தப் பாட்டு!

பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய், பாட்டு வரிகள்-ல பிச்சி ஒதறி இருக்காரு! குத்துப்பாட்டில் கந்த சஷ்டிக் கவசமும், அருணகிரியும் கொண்டு வரணும்-னா சும்மாவா?
இசை = நம்ம யுவன்!
சும்மா நாதஸ், தவிலு, குத்திசைன்னு, கலக்கி இருக்காரு! அப்பா தான் நாதசுரம் தவிலுன்னு பல சமயம் கலந்து கொடுப்பாரு! பையனும் அடிச்சி ஆடி இருக்கான்!


இது வரை முருகனடியார்கள், இந்த வலைப்பூவில் குத்துப்பாட்டுன்னு தனியாப் போடலைன்னாக் கூடத், துவக்கம்-னு ஒன்னு இருந்தா தானே, தொடரும்-னு ஒன்னு இருக்கும்! அதான் அடியேன் பொடியேன் ஆசையாத் துவங்கிட்டேன்!
குத்து குத்து கூர்வடி வேலால்!
குத்து குத்து குத்துப் பாட்டால்!!
:-)

பாட்டின் வரிகளைக் கேட்டுக் கொண்டே படிங்க! ஆடணும்-னு நெனச்சாலும் தப்பில்லை! கொஞ்சம் அக்கம் பக்கம் பாத்துட்டு ஆடுங்க மக்கா! :-)

Seval Kodi.mp3

பாட்டை மேலே கேக்க முடியலைன்னா, இதோ MusicIndiaOnline சுட்டி


வேல்! வேல்!! வேல்! வேல்!!

சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா,
வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)

கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!


தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்!
புலிவேஷம் எங்களுக்குப் புகழ்கூட்டும்!
வீரம்தான் கந்தனுக்குத் தாய்ப்பாலு!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு!

வேடன் அடா வேடன் - இவன் தணிகைமலை நாடன்!
வீரன் அடா வீரன் - நாம கந்தனுக்குப் பேரன்!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்!
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!! - நீ

காட்டுக்குள்ள நடமாடி, காட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?

(சேவல் கொடி பறக்குதடா)

மனுஷன்தான் முருகனோட அவதாரம்!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்!
தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!

ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?


விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! -
வேல் வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா! -
வேல் வேல்!!


தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?

(சேவல் கொடி பறக்குதடா)







பாட்டைக் கொஞ்சம் அசை போடலாம், வாரீயாளா?


காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!

= இது அப்படியே கந்த சஷ்டிக் கவசம்!
காக்கக் காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட...ன்னு அதே வரிகள்!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்!
= மிக அருமையான வரிகள்! தமிழ்க் கடவுள்-னு முருகனைச் சொன்னாலும், கடவுளையும் தாண்டி ஒரு பரம்பரைத் தலைவன் - பாட்டன் கணக்காத் தான் - எளிய மக்கள் முருகனைக் கருதறாங்க! காவடி தூக்கி ஓடியாறாங்க!

காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
= முருகன் காட்டுக்குள்ள வள்ளியை டாவடிக்க நடமாடினாரு! தெரியும்!
ஆனாக் கா(நா)ட்டுக்குள்ள எப்போ முடி சூடினாரு? வந்து சொல்லுங்க ஜிரா! :-)

சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு! = ஹிஹி - நெஜமாலுமே சூப்பரு!
இனி, திருச்செந்தூரில், சூர சம்ஹாரம்-னு சொல்றதுக்குப் பதிலா,
"சூரன் சுளுக்கெடுத்தல்"-னு அழகாத் தமிழ்லயே சொல்லலாம்! :-)



ஆதித் தமிழன் ஆண்டவனானான்!
மீதித் தமிழன் அடிமைகளானான்!!

= ஐயகோ! கவிஞர் இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறாரே!
முருகா, நீ ஆண்டானாப் போயிட்ட! நாங்க எல்லாம் ஒத்துமையில்லாம அடிமையாப் போனோமா? - ஈழத்துல, தமிழன் ஆண்டாண்டு காலமா அல்லல்படுவதைப் பார்த்தும் கூட, போகட்டும் அடிமைகள்-னு எங்கள எல்லாம் நீ விட்டுட்டியோ?

மனுஷன்தான் முருகனோட அவதாரம்! - என்ன ஒரு ஒற்றுமை, ஆழ்வார்கள் கருத்துடன்!
மனிதனாய் அல்லவோ இறைவன் வருகிறான்! சிறையில் பிறக்கிறான், புழுதியில் வளர்கிறான், தாய் தந்தை இல்லாமல் தவிக்கிறான்; நண்பர்களோடு லூட்டியும் அடிக்கிறான், காதல்-னா என்னன்னு கற்றும் கொடுக்கிறான்!
மனிதன் தான் இறைவனோட அவதாரம்! மனித குல மேம்பாடே இறைப்பணி!!

வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்! = பார்வதிக்கு எங்கூர்ல சிவதாரம்னு நாட்டு வழக்காச் சொல்லுவாய்ங்க! சிவதாரம் பெரியம்மா எங்க வூட்டுக்கு நாலு வூடு தள்ளி இருந்தாங்க!
சிவதாரம் வயித்துல பெக்காம, சிவன் கண்ணில் பெத்ததால், முருகனைத் "தத்து எடுத்தா சிவதாரம்"-னு கவிஞரு சிம்பிளாச் சொல்லிபுட்டாரு!

வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்! தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
= அருமை! அருமை! அப்படியே திருவிழா கண்ணு முன்னால வருது!

தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?

= நச்சுன்னு கேட்டாருப்பா!
பார்வதி பிரிய நந்தனாய நமஹ-ன்னு சொல்லுறவங்க சொல்லிக்கட்டும்! நம்ம புள்ளை முருகனை அடுத்தவங்க செல்லமாக் கூப்பிட்டா, அவிங்கள போடா டேய்-ன்னு சொல்லுவோமா? - ஆனா, நம்ம வூட்டுக்குள்ளார சிவதாரப் புள்ளையாண்டானே-ன்னு தாராளமாக் கூப்பிட எவன் வந்து தடை சொல்றது?

நம்ம புள்ளைய, பேச்சு வழக்குல, நம்ம வூட்டுல கூப்பிடாம, வேற எங்கன போயிக் கூப்புடப் போறோம்?

பெருமாக் கோயில்ல கூட, இடையறாது தமிழ்-ல ஓதறாங்க! - நீராட்டம் துவங்கி நிவேதனம் வரை பாசுரங்கள் ஓதக் காணலாம்! உற்சவப் புறப்பாடுகளில் தமிழ் முன்னால்...இறைவன் பின்னால்...அதற்கும் பின்னால் வடமொழி வேதங்கள்!
ஆனா தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லிக்கிட்டு முருகன் கோயில்ல மட்டும்...ஹூம்! இங்கும், தமிழ் இடையறாது ஒலிக்கும் நாள் எந்த நாளோ? முருகா, மனசு வையிப்பா, என் செல்வமே!

வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா! நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
= பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்; உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்-ன்னு கண்ணதாசனும் பாடினாரு!
ஆனா, "நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா"-ன்னு லோக்கலாப் பாடும் போதும், அதே கிக்கு இருக்கத் தான் செய்கிறது! என்னா சொல்றீங்க மக்களே?

குத்துப் பாட்டு முருகனுக்கு அரோகரா! பத்து மலை முருகனுக்கு அரோகரா!!

Friday, November 16, 2007

கந்த சஷ்டி- 7: வள்ளித் திருமணம் - ஜீவாவின் பதிவு!

ஆறு நாட்களில் ஆறு பதிவுகளில் ஆறு முகனுக்கு சஷ்டி சிறப்புப் பதிவுகளில் முருகனருள் முன்னிற்கிறது.

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவாய் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் முகம் ஒன்றே
வள்ளியயை மணம் புரிய வந்த முகம் ஒன்றே
என்று ஆனந்த பைரவியில் கண்ட சாபு தாளத்தில் அருணகிரி பாடிய ஆறுமுகமான பரம்பொருளை ஆறு பதிவுகளில் பாடிடக் கேட்டோம்:

* சரவணபவ என்னும் திருமந்திரம் ஷண்முகப்பிரியாவில் ஷண்முகன் புகழ் பாடியது.
* பரம்பொருள் அகரம் முதல் அனைத்தும் ஆனதை திருப்புகழில் புகழ்ந்தது.
* முருகு என உருகிடும் இன்பம்போல் வேறுண்டோ என சீர்காழியார் குரல் கேட்டது.
* நாத, வேத, ஞான பண்டிதனை ராஜ அலங்காரத்திலும் பார்த்தது.
* முதல் சொல் தந்து முக்திக்கு வித்தானவனை அருணகிரியாரின் சொற்சுவையில் பருகியது.
* தியான நிலையில் அகமுருகி நின்றார்க்கு அருள் பாலித்திடும் செந்தில்நாதனைப் போற்றியது.

இப்படியாக, குமரனும், கே.ஆர்.எஸ் உம் தாங்கள் தேர்ந்தெடுத்த தேனான பாடல்களை கேட்பதற்கு தோதாக தந்திட, கைமாறென்ன செய்வேன்? நன்றியோடு சேர்த்து வேறென்ன தரலாம்? பதிவு தரலாமா? வள்ளி திருமணமும், மங்களமும் கொடுத்து சஷ்டி பதிவுகளுக்கு இனிதான நிறைவினைத் தரலாமா!



வள்ளி திருமணத்தினை இசை நாடகமாக வெளியிட்டிருக்கிறார்கள் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலனின் குழுவினர். இணையத்தில் அதனை இசைக்கோப்பாக வெளியிட்டுள்ளார்கள் சிஃபி தளத்தினர். நீங்களே கேட்டு மகிழுங்கள்.
வள்ளி திருமணம் ஒலிக்கோப்பு - பதினேழு பகுதிகளில்!

பாடல்களின் வரிகள்



இறுதியில் மங்களமும் பாடிடலாமா? MSV இசையில் SPB பாடி வெளிவந்த முருகன் சுப்ரபாதம் இசைத் தொகுப்பிலிருந்து மங்களம் பகுதி:





மங்களம் தருக என்றேதான் மலரடியை வேண்டுகிறோம்
மலையேறிய குமரேசா வந்தனம் வளர்க மங்களம்

பூமியில் கலியில் பூரணமாய் தோன்றிடும் சுவாமிநாதனே
புகழாம் பெரு சாகரனே கந்தனே பொலிக மங்களம்

நாதனே வேதநாயகனே நாதாந்தமான பூரணா
நயனங்களில் அன்பாளும் முருகனே தருக மங்களம்

தாரகன் சூரபதுமனெனும் தீமையை வென்ற தீரனே
தணிகாசல பெருமாளே உந்தனுகிங்கு வந்தனம்

வாடுவார் நெஞ்சில் பதமாவாய் வள்ளலே வள்ளிநாயகா
வயலூரினில் வளர்வாயே எங்குமே பொலிக மங்களம்

மாயவன் மாலின் மருகேசா மங்களம் அருளும் வாசவா
மருதாசல முருகேசா மன்னனே நித்ய மங்களம்

பதிவு: Jeeva Venkataraman

Thursday, November 15, 2007

கந்த சஷ்டி - 6: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!

திருச்சீரலைவாய் அப்படிங்கிற ஊருக்குப் போய் இருக்கீங்களா?

இல்லியே அது எங்கப்பா இருக்கு?

அட, என்னங்க கடல் கொஞ்சும் செந்தூர்-ன்னு சொல்லுவாங்களே!

ஓ...திருச்செந்தூரைச் சொல்லுதீயளா? போயிருக்கோம்! போயிருக்கோம்!

போயிருக்கீங்க சரி...சூர சம்ஹாரம் என்னும் சூரனுக்கு அருளலைத் திருச்செந்தூரில் யாராச்சும் பார்த்திருக்கீங்களா?
பார்க்கலைன்னா, பதிவின் இறுதியில் அசைபடத்தில் (வீடியோவில்) காணுங்கள்! வாரியார் சுவாமிகளின் இளமைக் குரலும் கடைசியில் கேட்கிறது!

சரி, அது என்ன திருச்-சீர்-அலை-வாய்?
"வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்" என்று புறநானூறு சொல்கிறது.
வெள்ளலைகள் வீசி வீசி அலைக்கும் வாய்ப்புறம் = அலைவாய்!
-"திரு" என்னும் வெற்றித் திருமகள் விளங்க,
-"சீர்" (புகழ்) பெற்று
-"அலைவாயிலே" ஊர் விளங்குகிறது!

ஆம். இந்த ஊர் வெற்றிப் பட்டினம்! அதுவே இந்தச் செந்தில்!
ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன.
இப்படி ஊரின் பெயரிலேயே செல்வமும், வெற்றியும் விளங்குகின்றது.
ஏமகூடத்தில் போர் நடந்தாலும், திருச்சீர்+அலைவாயின் கரையோரத்தில் தான், தமிழ்வேள் முருகன் பெற்ற அந்த வெற்றி கொண்டாடப்படுகிறது!


சூரன் ஆணவ மலம்!
மும்மலங்கள்=ஆணவம், கண்மம், மாயை; இதில் ஆணவம் மட்டும் வந்து விட்டால், மற்ற ரெண்டும் கூடவே ஒட்டிக்கிட்டு வந்துரும்!
செய்தது தவறு என்று தெரிந்த பின்னரும் கூட, ஆமாம்டா, செஞ்சேன்; இப்ப அதுக்கு என்னாங்குற-ன்னு பேச வைப்பது ஆணவம்!
குறைந்த பட்சம், குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்ற விடாது தடுப்பது தான் இந்த ஆணவம்!

இதுவே இராவணன், சூரன் ஆகியோரின் இயல்புகளாகச் சொல்லப்பட்டது!
சைவ சித்தாந்தத்தின் அடிநாதமே, உயிர்கள் இந்த மும்மலங்களை அறுத்து இறைவனிடம் சேர வேண்டும் என்பது தான். அதற்கும் இறைவன் அருள் தேவை! - அதைத் தான் முருகன் செய்தான். ஆணவத்தால் ஆடி விட்டுக், கடைசியில் தனி மரமாய் நின்றவனை, மருள் செய்து அருளினான். ஆணவம் அழிந்ததால், அவனடி தெரிந்தது.



திருச்செந்தூர் தலத்துக்கு இதுவரையிலும் செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை. அப்படியே மனத் திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!

திருச்செந்தூர் கோவிலின் முதல் மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :-)
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்!

முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது.
அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்;

பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க,
தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.

முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!

ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! அதான் செந்து+இல்=செந்தில்!
பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!

கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்! பாலமுகம்!
சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும், திருப்பவளச் செவ்வாயுமாய்...
தோள்களில் வெற்றி மாலை தவழ, அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ...
கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!

உற்சவர் சண்முகப் பெருமான்! டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!
செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!

இன்று கந்த சஷ்டி இறுதி நாள்!
இதோ இன்றைய பாட்டு! கேட்டு மகிழுங்கள்! - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
TMS-உம், சீர்காழியும் சேர்ந்து பாடுவது! தெய்வம் படத்துக்காகத் திருச்செந்தூரிலே படமாக்கப்பட்டது! குன்னக்குடி இசையில், கண்ணதாசன் எழுதியது!




திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!




நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்
முருகா!!! - சஷ்டியின் ஆறு நாளும் அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!

சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!

Wednesday, November 14, 2007

கந்த சஷ்டி - 5: முத்தைத்தரு பத்தித் திருநகை! ( பாடும் முன் எச்சரிக்கை!)

சின்ன வயசுல பள்ளிக் கூடத்துல ஒரு போட்டி! ஏதோ கந்த சஷ்டியாம்! அதுவோ ஒரு சமணப் பள்ளிக்கூடம்; இருந்தாலும் தமிழாசிரியர் போட்டிய வச்சிட்டாரு! சரியாச் சொல்லணும்னா, ஆசிரியர் அல்ல! ஆசிரியை! ஆ+சிரியை = சிரிச்சிக்கிட்டே ரொம்ப அன்பா, அழகா இருப்பாய்ங்க! :-) தமிழ் விழா-ங்கிற பேருல, எங்க Group மாணாக்கர்களுக்கு மனப்பாடச் செய்யுளைப் போட்டியா வச்சிட்டாங்க! முத்தைத் தரு பத்தித் திருநகையை மனப்பாடமா, தவறில்லாம, படபட-ன்னு வேகமாச் சொல்லணும்! அப்படிப் பிரமாதமாச் சொல்லி முடிக்கறவங்களுக்கு, தோகை விரித்த மயில் பொம்மை பரிசு! கம்பியில் செஞ்ச மயிலு! நிஜமான மயில்தோகை இருக்கும்! Teacher, இப்படிச் சொன்னது தான் தாமதம், வீட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடியாந்தேன்! என் அத்தை படிக்கும் திருப்புகழ் புத்தகத்தை எடுத்து நோட்டம் விட்டேன்! முத்தைத் தரு பத்தி - எந்தப் பக்கத்துல இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டேன்! ஆனா ஒன்னுமே புரியலை! சும்மா வாய் விட்டுப் படிச்சிப் பாத்தேன்! வாய் குழறது! தக்கத் தக தக்கத் தக தக - குக்குக் குகு குக்குக் குகு குகு...... அட என்னடா இது! ரயில்ல எவனோ 'கூட்ஸ்' வண்டிக்காரன் எழுதின பாட்டைத் தான், அருணகிரி எழுதிட்டாரு-ன்னு மக்கள் சொல்லிப்பிட்டாங்களோ? :-) இப்படிச் சின்ன வயசுக்கே உரிய அலுப்பும், குறும்பும்! முதல் பத்தியை எழுத்துக் கூட்டிப் படிக்கறதுக்குள்ள தாவு தீந்து போச்சு! :-)

அத்தை கிட்ட போயி, அந்தப் பாட்டைச் சொல்லித் தருமாறு கேட்டேன்! அவங்க மயக்கம் போட்டு விழாத குறை தான்! பின்னே, காலங்காத்தால எழுந்து, பாலும் தெளிதேனும்-னு சொல்றதுக்கே மோரும் 'போர்ன்வீட்டாவும்'-னு சொல்ற பையன் நானு! :-) பள்ளியில் எப்படியும் எனக்குத் தான் பரிசு தரணும் - அதுக்கு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க அத்தை-ன்னு கெஞ்சிக் கூத்தாடி...கடைசியில் அந்தப் பொறுமையின் சிகரம், பாதிப் பாட்டை எனக்குச் சொல்லிக் கொடுத்தே...ஓடாய்த் தேஞ்சிப் போயிட்டாங்க! நானும், சும்மா இல்லாம, நண்பர்கள் கிட்ட அளப்பற வுடலாம்-னு...பாட்டை அவிங்க முன்னாடி மனப்பாடமா எடுத்து வுட்டேன்! பசங்க கதி கலங்கிப் போயிட்டாங்க! எப்படிடா ஒரே நாள்-ல இப்படிக் கொட்டு கொட்டு-ன்னு கொட்டற-ன்னு ஒரே பாராட்டு மழை! நானும் அதுல நனைஞ்சி போயி, பாதிப் பரிசு அப்பவே கிடைச்சுட்டதா நினைச்சுகிட்டேன்! ஆனா வந்தது பாருங்க ஒரு வினை! கோபால்-ங்கிற பையன் ரூபத்துல! இந்தப் பாட்டை அட்சரம் பிசகாம அப்படியே பாடினா... ஏதாச்சும் ஒரு பறவை, கிளியோ குருவியோ..... பாட்டைக் கேட்டு அப்படியே கீழே விழுந்து செத்துப் போகுமாம்! இப்படி-ன்னு குண்டைத் தூக்கிப் போட்டான்! அருணகிரி பாடினப்போ ஒரு கிளி விழுந்துச்சாம்டா...இன்னிக்கும் திருவண்ணாமலையில கிளி கோபுரம்னு ஒன்னு இருக்காம்-னு எடுத்து விட்டான் ஒரு Bitஐை! எனக்கு ஒரே சங்கடமாப் போச்சுது! இயற்கையிலேயே எனக்கு ரொம்பக் கருணைச் சுபாவம் பாருங்க! மனசே கேக்கலை! போட்டியிலிருந்து பேரை விலக்கிக்கிட்டு, அப்படியே வந்துட்டேன்; அத்தை, என்னடா விசயம்?; மீதிப் பாட்டை எப்ப கத்துக்கப் போற?-ன்னு கேட்க, விசயத்தைச் சொன்னேன்! ஒரு உயிரைக் கொன்னு, அப்படி என்ன சாமிப் பாட்டு வேண்டிக் கிடக்கு? ஒன்னும் தேவையில்லை! போங்க அத்தைன்னு.... சொல்ல, அவங்க விழுந்து விழுந்து சிரிச்சாய்ங்க! அடப் பாவி...உன்னைப் போட்டியில் இருந்து ஒதுக்க, நல்லாவே கதை விட்டுருக்கான் அந்தப் பையன்! அது புரியாம கோக்கா மாக்கானா இருக்கியே நீயி-ன்னு சொன்னதும்...ரோசம் பொத்துக்கினு வந்திருச்சு! அடப் பாவி கோபாலு...நீ கோபாலா, கோயபெல்ஸா? மீதிப் பாட்டை அன்னிக்கே கஷ்டப்பட்டு உருப் போட்டேன்! பொருளும் சொல்லிக் கொடுத்தாங்க அத்தை! ஆனா அதெல்லாம் யாருக்கு வேணும்? போட்டி நடந்தது!!! பொருள் என்னன்னே தெரியாம, கடகட வென்று ஏத்த எறக்கத்துடன் கொட்டித் தீர்த்தேன்! இடி இடிச்சு முடிஞ்சாப்பல இருந்துச்சாம்! நண்பர்கள் சொன்னாய்ங்க! பாடி முடிச்சவுடன் மறக்காம சுற்றும் முற்றும் பார்த்தேன். எந்தப் பறவையும் கீழே விழவில்லை! :-) எனக்கே முதல் பரிசு! கையெழுத்துப் போட்டியில் இன்னொரு பரிசு! ஹைய்யா! பரிசு கொடுக்க மேடைக்குக் கூப்பிட்டாங்க... வாரியார் கையால பரிசு-ன்னா சும்மாவா? ஒரே டென்சன்...அவரு சிரிச்சிக்கிட்டே கொடுத்தாரு சான்றிதழ்களையும், மயில் பொம்மைகளையும்! ரெண்டு பரிசா?...கை நிறைய இருந்துச்சா? வாங்குற பதற்றத்துல நான் மயிலைக் கீழே போட, போச்சுடா! கோபாலு சொன்னது சரி தான்! பாட்டைப் பாடினா, பறவை கீழே விழும்-னான்! விழுந்திடிச்சி!:))) நல்ல காலம் பொம்மை ஒடியலை! கம்பி மயிலு பாருங்க! வாரியார் காலடியில் குனிஞ்சு பொம்மையை எடுத்த போது...சிரிச்சிக்கிட்டே தூக்கி, தலையைத் தடவிக் கொடுத்தது...இன்றும் இனிக்கிறது! அடே கோபால், உன்னால தான்டா இந்த ஆசீர்வாதம் கிடைச்சுது... இன்னிக்கு அவனும் அமெரிக்காவுல தான் இருக்கான்! இன்றும் இது பற்றிப் பேசிச் சிரித்துக் கொள்வோம்! :-)) கந்த புராணத்தை அவர் சொல்ல, அதிலொன்றை மறுத்து நான் சொல்ல.. அப்பவே பெரியாரைத் தெரியாமலேயே பெரியாரிசம்:) உற்பத்திக் காண்டமும், அசுர காண்டமும், இந்தத் துக்குனூண்டு பையன் இப்படி ஒப்பிச்சி மடக்குறானே-ன்னு நினைச்சாரோ என்னமோ, அவர் கையால் என் வாழ்நாள் முருகப் பரிசும் கிட்டிற்று! ஈதே என் தோழா பரிசிலோ ரெம்பாவாய்!
அருணகிரிக்கு "முத்து" என்ற முதற் சொல் எடுத்துக் கொடுத்தான் முருகன்! அப்படித் தோன்றியது திருப்புகழ் - முத்தைத் தரு பத்தித் திருநகை என்று அழகிய சந்தப் பாடலாக! முத்து = அருணகிரி சிறு வயதிலேயே பறிகொடுத்த அம்மா பேரு! முத்து = குற்றயலுகரம்; முத்தி = முற்றியலிகரம்! முத்து=முத்தி தரு பத்தித் திருநகை! இன்றைய சஷ்டிப் பதிவில் அதைக் கேட்டு இன்புறுவோம்! - கீழே அருணகிரிநாதர் படத்தில் இருந்து youtube வீடியோவும் இருக்கு, பாருங்க! முடிந்தால் கூடவே படிச்சிப் பாருங்க! பிடிச்சிப் போயிடும்! - அப்படி ஒரு சொற்கட்டு! தாளக்கட்டு! ஜதிக் கட்டு! பொதுவா வடமொழி மந்திரங்கள் தான் ஓசை முழக்கம்-னு சொல்லிச் சிலாகிச்சிப்பாங்க சிலபேரு! ஆனா இந்தத் தமிழ் மந்திரத்தின் ஓசையும் கேட்டுப் பாருங்க! அப்படி ஒரு முழக்கம்! * TMS பாடுகிறார், அருணகிரிநாதர் திரைப்படத்தில் ** வீணை இசையில் பிச்சுமணி (வாசிக்க எளிதாக இருக்கட்டுமே-ன்னு பதம் பிரிச்சு தந்துள்ளேன்; சந்தத்தோடு ஒட்டினாற் போல் சேர்த்துப் படிக்கவும்/பாடவும்!)

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும் முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் ...... அடி பேணப் பத்துத் தலை தத்தக் கணை தொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருது - ஒரு பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தர்க்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிரத்தப் பதம் வைத்துப் பயிரவி திக்கொட்க நடிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப் பரி அட்டப் பைரவர் தொக்குத் தொகு - தொக்குத், தொகு தொகு சித்ரப் பவுரிக்கு - த்ரி கடக ...... என ஓதக் கொத்துப் பறை கொட்டக் களமிசை குக்குக் குகு - குக்குக், குகு குகு குத்திப் புதை - புக்குப் பிடி என ...... முது கூகை கோட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டிப் பலி இட்டுக் குல கிரி குத்துப் பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.


சில படங்களுக்கும், பாட்டின் பொருளுக்கும் நன்றி: kaumaram.com
பாட்டின் பொருளும் தெரிந்து கொள்ள ஆசையா இருக்கா? - இங்கு செல்லவும்! கந்தனருள் கனியும்! நாளை வியாழக்கிழமை, திருச்செந்தூர் முதலான தலங்களில், சூரசங்காரம்! திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - பாட்டுடன் சஷ்டிப் பதிவுகளை நிறைவு செய்வோம்! அவசியம் வாங்க!! வெற்றி வேல் முருகனுக்கு 'அரகரோகரா'!

Tuesday, November 13, 2007

கந்த சஷ்டி - 4: தமிழில் அர்ச்சனை! நாதவிந்து கலாதி நமோநம!

இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்! - ஆலயத்தில் இந்த அறிவிப்புப் பலகை பற்றிய ஒரு சர்ச்சை, சில காலத்துக்கு முன் பதிவுலகில் எழுந்தது! அந்த "உம்" பல பேரை அசைத்துப் பார்த்தது! :-) இறை அறிவுக்கு, மொழி அறிவு தேவையா-ன்னு தொடங்கி, விவாதங்கள் பல திசையில் ஓடின!

இறைவனைப் போற்றவும், பூசிக்கவும் இது ஒன்று தான் மொழி என்பது கிடையவே கிடையாது! - இது பாமரனுக்கும் தெரியும், பண்டிதனுக்கும் தெரியும்!ஆனா நடைமுறைப் படுத்தும் போது தான், விவாதமும் அரசியலும் கலந்து, சூடு பிடிக்கின்றன! அதனால் பயன் விளைகிறதா? - ஆளுக்கொருவர் ஒரு கைப்பிடியாச்சும் அள்ளிப் போடுவார்களா?

போற்றிகள், பூசனைகள், வேள்விகள், உற்சவங்கள்-ன்னு மந்திரங்களை அனைவரும் அறியும் வண்ணம், பொருள் செய்து கொடுப்பார்களா?
இல்லை அப்படி ஏற்கனவே செய்த சிலவற்றையாவது கடைப்பிடிப்பார்களா?
இல்லை இது போன்ற முயற்சிகளுக்குத் துணை நிற்பார்களா?
பதிவுலகில் - தமிழில் தியாகராஜர், தமிழில் சுப்ரபாதம், தமிழ் வேதம் - திருவாய்மொழி எல்லாம்.....இது போன்ற சிறு சிறு முயற்சிகள் தான்! மிகவும் சிறிய முயற்சி என்று கூடச் சொல்லலாம்!

ஆனால் இதையும் தாண்டிப் பெரு முயற்சி ஒன்று உள்ளது!
அந்தப் பெரு முயற்சிகள் செய்தவர்கள் எல்லாம் விவாதப் புலிகள் அல்ல! அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம் சொல்லி மாளாது! - செயற்கரிய செய்வார் பெரியர் என்பது ஐயன் வாக்கு!
அப்படித் தமிழில் முதன் முதலில் அர்ச்சனை செய்தது யார் தெரியுமா?



"ஓம் திருவிக்ரமாய நமஹ" என்ற அர்ச்சனை மந்திரத்தை அப்படியே மாற்றிக் காட்டியவள் ஒரு பெண்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று, நமஹ என்ற அர்ச்சனையைப் போற்றி ஆக்கிக் காட்டிய அந்தப் பெண், ஆண்டாள்!
தமிழில் அர்ச்சனை என்பதை முருக வழிபாட்டிலும் நிறைவேற்றிக் கொடுத்த நல்லவர் ஒருவர் இருக்காரு!
அவரு சந்தக் கவி, நம் சொந்தக் கவி, கந்தக் கவி, அருள் முந்தக் கவி! - அருணகிரி!!! - அர்ச்சனை என்று பெயரிட்டே, சில அருமையான மந்திரங்களைச் செய்துள்ளார்!

அவற்றில் சில சமயம் வடமொழியும் கலந்து வரும்! ஆனால் உறுத்தாது!
பீஜாட்சர மந்திர ஓசைகள் தேவைப்படும் போது தான், தமிழ் அர்ச்சனையில் இவ்வாறு செய்துள்ளார்! - அப்படிப்பட்ட தமிழ் அர்ச்சனையில் ஒன்று, நாத விந்து கலாதீ நமோ நம என்னும் திருப்புகழ்! - இது திருவாவினன்குடி என்னும் பழநித் திருப்புகழில் உள்ள அர்ச்சனை!

இதை மனப்பாடம் செய்வதும் மிக எளிது! முயன்று பாருங்க! இந்த அர்ச்சனை உங்களுக்குப் பிடித்துப் போகும்!
இன்றைய கந்த சஷ்டிப் பாடலாக, தமிழில் அர்ச்சனை செய்யலாம் வாங்க!
இந்த "நமோ நம" திருப்புகழ் அர்ச்சனையால், நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்...முருகா என்று ஓதுவார் முன்! - நீங்களும் ஓதுங்கள்!

இதோ, சுதா ரகுநாதன் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், ஒரு இழு இழுப்பது நல்லாவே இருக்கு! :)



* எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடுவது
** உன்னி கிருஷ்ணன்
*** ஜலதரங்க வாத்திய இசை
**** புல்லாங்குழல் - மாலி


நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி


நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்


மேலோட்டமான பொருள்:
நாத விந்து கலாதீ நமோநம = சிவ சக்தி தத்துவத்துக்குப் பொருளே நமோநம!
வேத மந்த்ர சொரூபா நமோநம = வேத மந்திர உருவமானவனே நமோநம!
ஞான பண்டித சாமீ நமோநம = ஞான பண்டித, சுவாமி நாதனே நமோநம!

வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோநம = கோடி பெயர்கள் கொண்ட சிவ குமாரனே நமோநம!
போக அந்தரி பாலா நமோநம = இன்பம் தரும் பார்வதி குமாரனே நமோநம!

நாக பந்த மயூரா நமோநம = பாம்பைக் காலில் கட்டிய, மயில் வாகனனே நமோநம!

பரசூரர்
சேததண்ட விநோதா நமோநம = சூரரைத் தண்டித்து விளையாடல் செய்தவனே நமோநம!
கீத கிண்கிணி பாதா நமோநம = இன்னொலி சதங்கைகள் கட்டிய பாதங்களைக் கொண்டவனே நமோநம!
தீர சம்ப்ரம வீரா நமோநம = தீரனே, போர்வீரனே, நமோநம!

கிரிராஜ = மலை அரசே
தீப மங்கள ஜோதீ நமோநம = தீப விளக்குகளின் ஒளி வடிவே நமோநம!
தூய அம்பல லீலா நமோநம = தூய அம்பலத்தில் லீலைகள் புரிபவனே நமோநம!
தேவ குஞ்சரி பாகா நமோநம = தேவயானைப் பிராட்டியைப் பக்கத்தில் கொண்டவனே நமோநம!
அருள் தாராய் = உனது திருவருளைத் தந்தருள்வாய்
!



இனி, அர்ச்சனையைத் தொடர்ந்து வரும் அதே பாடல்!

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத


ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே



தமிழிலேயே உள்ளதால் பொருள் சொல்லவில்லை. பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! அருணகிரி ஒரு முக்கியமான நிகழ்ச்சியையும் இந்தப் பாடலில் குறிக்கிறார். அந்தக் கதையை இங்கு காணலாம்!

திருப்புகழ் அர்ச்சனையில் வரும் காவிரி வயல் வர்ணனையில் உள்ளம் பறி கொடுக்கலாம். ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா என்று நாமும் அர்ச்சிக்கலாம், வாருங்கள்!
தீப மங்கள ஜோதீ நமோநம! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!

Sunday, November 11, 2007

கந்த சஷ்டி - 3: நீயல்லால் தெய்வமில்லை!

முருகனைப் பற்றிய இசை என்றால் பல பாடகர்கள் நினைவுக்கு வந்தாலும், படேரென்று பலருக்கும் நினைவுக்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் தான்! - ஏன்?

இசைப் பேரறிஞர், பத்ம ஸ்ரீ போன்ற பட்டங்கள் பெற்றவர் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்! - அவர் தமிழிசைக்கு செய்த தொண்டு அளப்பரியது!
ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரி என்று பல பாடல்கள், இவரின் குரலில் இசை வடிவம் பெற்றன!

திருவையாறு தியாகராஜர் உற்சவ சபையின் செயலராகவும் பல தொண்டுகள் செய்தார்!
பிபிசி, ரூபவாகினி என்ற வெளிநாட்டு மீடியாக்களும், பக்திப் பாடல்கள் மீது கவனத்தைத் திருப்பிய பெருமை சீர்காழிக்கு உண்டு!

இசை மட்டுமா? நடிப்பும் தானே!
அகத்தியர், ராஜ ராஜ சோழன் படங்களை மறக்க முடியுமா?
தசாவதாரத்தில் நாரதர் வேடம்! வா ராஜா வா படத்தில் சி.ஐ.டி போலீஸ் வேடம்!
தனக்குக் கிடைத்த விருதுகளின் பணத்தில், தன் குருநாதர் திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளையின் பேரில், அறக் கட்டளைகள் நிறுவினார்!
தனது 55ஆம் வயதில் இறைவனடி சேர்ந்த சீர்காழியின் இறுதி வாசகம்: "உலகம் வாழ்க!"


வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!!
- என்று சொல்வதைக் கொஞ்சம் உன்னிப்பாய்க் கவனிக்க வேண்டும்! வணங்கினால் என்ன என்ன இன்பம் வரும்?

அந்தக் கடவுளை வணங்கினால் செல்வம் வரும்! இந்தக் கடவுளை வணங்கினால் படிப்பு வரும்!! கந்தக் கடவுளை வணங்கினால் வீரம் வரும்-னு பல பேரு சொல்லுவாங்க!
பொதுவா உலகியலுக்குச் சொல்லுறது தான் அது! ஆனா உயர்ந்த பக்தியிலோ, காதலிலோ எது வரும், எது வராது என்ற கணக்கு முன்னே வராது! :-)

வணங்கினால் என்ன இன்பம் வரும்? வணக்கம் என்ற இன்பம் தான் வரும்!
இன்பத்தில் எல்லாம் இன்பம், இறை இன்பம்! வணங்கினால் அந்த இன்பமே வரும்! அதனால் தான் -- வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம் -- என்று பாடுகிறார்!



சீர்காழியின் குரலில் இன்றைய சஷ்டிப் பாடல்! கேட்க இதோ சுட்டி!


நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே
நீவாழும் எல்லை முருகா
(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்

நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்

(நீயல்லால்)

Saturday, November 10, 2007

கந்த சஷ்டி - 2: அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்...

இது ஒரு சிறந்த திருப்புகழ் பாடல். எல்லா திருப்புகழ் பாடல்களும் ஓசை நயம் மிக்கவை தான். அவற்றுள் இந்தப் பாடல் தாள கதியில் மிக மிகச் சிறந்து விளங்குகின்றது.




அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்




இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்



மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே


சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே



பாடலை கேட்க இங்கே அழுத்தவும்

கந்த சஷ்டி - 1: சரவணபவ எனும் திருமந்திரம்!

தீபாவளி, அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்குகிறது கந்த சஷ்டித் திருவிழா!
ஆறு நாட்கள்! ஆறாம் நாள் சூரனுக்கு அருளல்! - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் பார்ப்போம்!
ஆறாம் நாள் "திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்" பாட்டை இடுகிறேன்!(பித்துக்குளி முருகதாசர் பாடல்கள் இணையத்தில் எங்கு கிடைக்கிறது என்று அன்பர்கள் யாராச்சும் சொன்னால் மிகவும் மகிழ்வேன்!)

சரவண பவ என்பது திருவாறெழுத்து! சடாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவர்!
அதைப் பற்றிய பாடல் ஒன்றை, இன்று சஷ்டி முதல் நாளில் கேட்கலாம்!
பாபநாசம் சிவன் எழுதிய பாடல், சண்முகப் ப்ரியா என்னும் ராகத்தில்!
- சண்முகனுக்குப் ப்ரியமான ராகத்தில்!


பாடலைக் கேட்க சுட்டிகள் கீழே!
நித்ய ஸ்ரீ
சுதா ரகுநாதன்
ராஜேஷ் வைத்யா - வீணை



சரவணபவ எனும் திருமந்திரம் - தனை
சதா ஜபி என் நாவே - ஓம்

(சரவண)

புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து

(சரவண)

மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு (உ)மிழும்
சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன

(சரவண)



Sunday, November 04, 2007

வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ?


வஞ்சப்புகழ்ச்சி என்று தமிழிலும் நிந்தாஸ்துதி என்று வடமொழியிலும் சொல்லுவார்கள். வஞ்சப்புகழ்ச்சி என்பதோ புகழ்வது போல் இகழ்வது; நிந்தாஸ்துதி இகழ்வது போல் புகழ்வது. இந்தப் பாடல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

சிவபெருமானையே வணங்கி வரும் ஒரு புலவரிடம் முருகப்பெருமானைப் பற்றி பாடச் சொன்ன போது இந்தப் பாடலைப் பாடுவதாக சிவகவி திரைப்படத்தில் வருகிறது. நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. அந்தப் படத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி வரும் என்பதைப் படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள். ஆனால் பாடலை மட்டும் கேட்டுப் பார்த்தால் முருகனைப் பாட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே முருகனைப் போற்றுவதாக இந்தப் பாடல் இருக்கின்றது என்று தோன்றுகிறது.

***

வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? வெள்ளிமலை (வள்ளலை)
எந்தன்
சுவாமியைப் பாடும் வாயால் தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?

அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? என் அம்மை
அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண் வலை வீழ் சிலை வேடன்
கள்ளனை பாடுவேனோ?

அம்பிகை பாகன் என்னும் அகண்ட
ஸ்யம்புவைப் பாடும் வாயால்
தும்பிகையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

திரைப்படம்: சிவகவி
வெளிவந்த வருடம்: 1943
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
இசை: ஜி.இராமனாதன்


பாடலைக் கேட்க இங்கே அழுத்தவும்

Sunday, October 21, 2007

69. மலையாள முருகன்

தமிழ்க்கடவுளுக்குத் தமிழில் நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்று பாட்டுகள் காட்டலாம். ஆனால் மலையாளத்தில். அதுவும் திரைப்படத்தில்?

இதோ ஒரு பாட்டு. ஸ்ரீ முருகா என்ற மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாட்டு. ஞானப்பழம் நீ அல்லே ஸ்ரீ முருகா என்று இசையரசி பி.சுசீலாவும் மலையாளப் பாடகி மாதுரியும் இணைந்து பாடிய பாடல்.

ஸ்ரீகுமரன் தம்பி எழுதிய இந்த அருமையான பாடலுக்கு இசை தேவராஜன் மாஸ்டர். இவர் அலாவுதினும் அற்புத விளக்கும் என்ற தமிழ்ப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

சரி. வாருங்கள். பாடலைக் கேட்போம். மலையாளத்திலும் முருகனைத் தொழுவோம்.



அன்புடன்,
கோ.இராகவன்

(பாடலைத் தேடித் தந்த ராஜேஷ் அவர்களுக்கு நன்றி)

Monday, October 01, 2007

தமிழ் முருகனை ஆங்கிலத்தில் வழிபடலாமா?

தமிழ்க் கடவுள் முருகனை ஆங்கிலத்தில் போற்றிப் பாடினால் மகிழ்வானா? Language Independentஆ அந்தத் தமிழ்க் கடவுள்? :-)
முருகனருள் வலைப்பூவில் முதல் ஆங்கிலப் பாட்டு! - அடிக்க வராதீங்க சாமீ!....Lord Muruga, London Muruga
சரி, அப்படிப் பாடினவங்க யாரு? - டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்!

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பார்கள். இவர் தந்தை மெச்சிய தனயன்!
அறுவை சிகிச்சை - உடல் உறுப்பு மாற்று மருத்துவரும் (Transplant Doctor)கூட!
தமிழிசை, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகப் பணிகள் என்று பல முகங்கள் இவருக்கு! சென்னை மயிலாப்பூர் (திருமயிலை) கபாலீஸ்வரர்-கற்பகாம்பிகை கோவிலுக்கு அறங்காவலராகவும் இருந்தார்! தமிழிசை வித்தகர்!

தந்தையைப் போல அவ்வளவு பாடல்கள் பாடாவிட்டாலும், பாடிய வரை அத்தனையும் முத்தான பாடல்கள்! கணீர்க் குரல் தற்காலத்திய சினிமாவுக்குப் பொருந்த வில்லையோ என்னமோ, இவருக்குத் திரை இசையில் அவ்வளவா வாய்ப்புகள் வரவில்லை! ஓடக்கார மாரிமுத்து ஓட்டாவாயி மாரிமுத்து, ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சவுக்கியமா பாடலை, SPBஉடன் இவரும் சேர்ந்து பாடினார்! நினைவிருக்கா? :-)

ஆனால் தமிழ்ச் சொற்களைத் தங்க்ளீஷ் எல்லாம் ஆக்காமல், அப்படியே உச்சரிக்க இவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்! - இப்படி சுத்தமான உச்சரிப்பு தான் திரையிசையில் இவருக்கு ஆகாமல் போய்விட்டதோ என்னவோ? :-)
கர்நாடக இசைக் கச்சேரிகளில் பிற மொழிப் பாடல்கள் பாடும் போதும் கூட உச்சரிப்பில் இவருக்குக் கவனம் அதிகம்!


தாயார் சுலோசனா கோவிந்தராஜனுடன்-சிவசிதம்பரம்

லண்டனில் பிரபலமான இரண்டு முருகன் கோவில்கள் உண்டு!
ஒன்று சர்ச்சு ரோடு முருகன் கோவில். இன்னொன்று ஹை கேட் (High Gate - உயர் வாயில்) ஆலயம்.
இதில் எந்த ஆலய விழாவில் சிவசிதம்பரம் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார் என்பதை அறியோம்! ஆனா வரிகள் அத்தனையும் அருமை! மொழியையும் கடந்து முருகனிடம் உருக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வரிகள்!

In the Chambers of my Heart
A shrine I have for Thee
என்று பாடும் போது
இதயக் குகையில் (chambers of heart) - குகன் அல்லவா குடி கொள்கிறான்!
In Thy light let me walk
, O My Lord of my soul, என்று இறுதியில் ஒரு வெஸ்டர்ன் மெலடி போல் பாடலில் உருகும் போது....
தனி வழிக்குத் துணை...வடிவேலும் செங்கோடன் மயூரமுமே என்ற வரிகள் மனதில் தோன்றாமல் இல்லை!

பாடலை ஆங்கிலத்தில் சுவைபட படித்துப் பாருங்கள்!
அற்புதமான காதல் கவிதை - அதை Bryan Adams பாட, John Travolta ஆடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க தண்டபாணி தடை ஏதும் சொல்லப் போவது இல்லை! :-)

பாடலை இங்கே கேட்கவும் - sirkali.org தளம் - Real Player தேவை!
இல்லீன்னா, இங்கே சொடுக்கவும்!








இதே போல் வெல்டன் வெல்டன் வாஷிங்கடன் என்று அமெரிக்காவில், வாஷிங்கடன் முருகன் கோவிலைப் பற்றியும் பாடியுள்ளார்.





In the Chambers of my Heart
A shrine I have for Thee
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.

Lord முருகா London முருகா
Lord முருகா London முருகா


The candles of my love, are burning bright for Thee
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.


The blossom of my Soul, I offer unto Thee
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.


In silent communion I watch and wait for Thee,
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.

(In the Chambers of my Heart)

High Gate Azhagan

Two little eyes to look to God,
Two little ears to hear His praise,
Two little legs to walk His way,
Two little hands to work His will,
One little heart to love Him still.
One little heart to love Him still.


In Thy love let me live, O My Lord of my heart,
In Thy light let me walk,O My Lord of my soul,
In Thy grace let me bathe, O My Lord of my heart,
In Thy peace let me merge, O My lord of my Soul
.

(In the Chambers of my Heart)

Lord முருகா London முருகா
Lord முருகா London முருகா



வலைத்தலங்கள்:
http://www.highgatehillmurugan.org/
http://www.londonsrimurugan.org/

படங்களுக்கு நன்றி: sirkali.org

Wednesday, September 19, 2007

என்ன கவி பாடினாலும்........

ராகம்:-சிவரஞ்ஜனி தாளம்:- ஆதி

பல்லவி

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை

இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி)

(அனுபல்லவி)

அன்னையும் அறியவில்லை

தந்தையோ நினைப்பதில்லை

மாமியோ பார்ப்பதில்லை

மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...)

சரணம்

அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை

பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை

இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை

(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)

உள்ளம் உருகும் பாடல்களைபாடுவதில்,அதிலும் முருகன் பேரில் பாடுவதில்மறைந்த திரு. மதுரை. சோமசுந்தரத்தை யாரும் மிஞ்சமுடியாது.முருகனோடு பேசிக்கொண்டே சங்கீதத்தை நமக்கு அள்ளித்தருவார்.பாமர ஜனங்களையும் இசையின் பால் ஈர்ப்பதில் வல்லவர். மதுரையில் கச்சேரி இரவு 10 மணிக்கு ஆரம்பித்தால் விடியற்காலை 4 மணிவரை பாடுவார். ஜட்கா வண்டிக்காரர்கள் சவாரியையும் விட்டுவிட்டு விரும்பிக் கேட்பார்கள்.



அவர் பாடிய பாடல்களில் மிகவும் அதிகம் பாடிய பாடல்"என்ன கவி பாடினாலும்" தான்.அதுவும் பல பாடல்களைப் பாடிய பின்பு கடைசியாகத்தான் பாடுவார்.சிவரஞ்ஜனிராகமேஇரக்கத்தைத் பரிமளிக்கும் குணமுடையது மட்டுமல்லாமல் மாற்றான் தோட்டத்து மல்லிகை. ஆம் இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம்.



இதேபாடலை ஓ.ஸ் அருணும் பாடியுள்ளார் அவர் பஜனை சம்பிரதாயத்தில்பாடியுள்ளார். இரண்டையும் கேட்டுப்பாருங்களேன்



ஓ.ஸ். அருணின் குரலில்'><"இங்கே கேட்கவும்">


மதுரை சோமுவின் குரலில் இங்கே கேட்கவும்! - மேலிருந்து கீழ், ஆறாம் பாடல்


Thursday, September 13, 2007

66. அபூர்வமான முருகன் பாட்டு

ஒரு அபூர்வமான பாட்டு கேப்போமா இன்னைக்கு? அதுவும் இளையராஜா இசைல?

அதுல என்ன அபூர்வம்? இளையராஜா இசையில முருகன் பாட்டு சினிமாவுல ரெண்டே ரெண்டுதான் எனக்குத் தெரிஞ்சி வந்திருக்கு. கூட இருந்துச்சுன்னா சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன்.

அந்த ரெண்டுல ஒன்னு மகராசன் படத்துல வர்ர "எந்த வேலு வந்தாலும்" அப்படீங்குற பாட்டு.

இன்னொன்னு இந்தப் பாட்டு. ஆனா படம் வேற. இதப் பாடுனவங்களும் இளையராஜா இசையில ரெண்டு பாட்டுதான் பாடியிருக்காங்க. ஒன்னு இது. இன்னொன்னு குணா படத்துல வர்ர "உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்?" தெரிஞ்சதா? எஸ்.வரலட்சுமி. வெள்ளிமலை மன்னவனா, அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தப்பூவினில், ஏடு தந்தானடி தில்லையிலேன்னு நெறைய பாட்டு பாடுன எஸ்.வரலட்சுமிதான் இந்தப் பாட்டைப் பாடியிருக்காங்க.

ஆக...இளையராஜா இசையில ஒரு முருகன் பாட்டு. அதுவும் எஸ்.வரலட்சுமி பாடியது. படம்? கவரிமான்.

சரி. பாட்ட எழுதுனது யாரு? மகாகவி சுப்ரமணிய பாரதியார். அவர்தான் இந்தப் பாட்ட எழுதியது.

இப்ப சொல்லுங்க என்ன பாட்டுன்னு. கண்டுபிடிச்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.

சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ
வல்ல வேல்முருகன் தன்னை....

இதோ கேட்டு ரசிங்க.



அன்புடன்,
கோ.இராகவன்

(இந்தப் பாடலை மெயிலில் தேடி அனுப்பிய நண்பர் டாலியாவிற்கு நன்றி பல)

Tuesday, September 11, 2007

உள்ளம் உருகுதைய்யா! உன்னடி காண்கையிலே!

சென்னையில் மேகலா தியேட்டரில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.
ஆனால் எந்தப் படமானாலும் சரி, அன்றைய விளம்பரம், காட்சி இவை எல்லாம் தொடங்கும் முன்னர், ஒரு பாடல் ஒலிக்க விடுவார்கள்! அது ஒலித்துக் கொண்டே தான் திரைச்சீலையும் மேல் எழும்பும்!
அது "உள்ளம் உருகுதய்யா"!

சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் மேல் மாடி. அப்போ, வாடகை வீட்டில் குடியிருந்த காலம். உறவினர்கள் வந்து விட்டால், வீட்டுக்குள் நடக்க முடியாது! நிற்கத் தான் வேண்டும்!
ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க...அப்போதே திருக்கோவிலூர் ஆழ்வார்களின் அனுபவமோ என்னவோ, எனக்கு அந்தத் தானா தெருவில்! :-) வேண்டுமென்றால் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்ளலாம்!

மழை பெய்தால் சில்லென்று வீட்டுக்குள் சாரல் அடிக்கும்! ஆனால் மழை தான் அப்போது பெய்யவில்லையே! தண்ணீர் கஷ்டம் சென்னையின் சொத்தாயிற்றே அப்போது!
வாளியிலும் குடத்திலும் தண்ணீர் பிடிப்பது பெரும் பிரச்சனை என்றால், அதை விடக் கஷ்டம், குடத்தை மாடியில் ஏற்றுவது! படிக்கட்டில் ஏற்ற ஏற்ற பெண்டு கழண்டி விடும்!

அப்போது கஷ்டம் தெரியாமல் கைகொடுத்த பாடல் என்றால் அது இது தான்! தோளில் குடத்தை வைத்துப் படியேறும் போது, "வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா" ன்னு ஒலிக்கும் பாருங்க...கிடுகிடு என்று படியேறி விடுவேன்! :-)

அப்போது தான் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிலோனில் இருந்து Sharp டேப் ரிக்கார்டர் வாங்கி வந்து கொடுத்த காலகட்டம்! குடும்பத் தெய்வமான முருகப் பெருமான் பாடல்கள் தான் பெரும்பாலும் டேப்பில் பதிவு செய்வார்கள், அம்மாவும் அப்பாவும்!
TDK-90, TDK-60 என்று விதம் விதமான டேப்புகள்!
நான் கேட்கும் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி படப் பாடல்களைப் பதியாமல், எப்ப பார்த்தாலும் முருகன் பாட்டையே பதிஞ்சா, எனக்குக் கோபம் வராதா என்ன? :-)

அதுவும் ஒவ்வொரு டேப்பிலும், "உள்ளம் உருகுதைய்யா" என்று தான் தொடங்கும்! இப்படி ஒரே பாட்டை எல்லா டேப்பிலும் பதியறீங்களே-ன்னு சண்டை போட்ட காலம் எல்லாம் உண்டு!
ஒரு முறை ஸ்ரீதேவி பாடும் "வடிவேலன் மனசை வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி" என்கிற பாட்டு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது! அதை நானும் காசெட்டில் ரெக்கார்ட் செய்து விட்டேன்! அப்புறம் தான் தெரியும், நான் அப்படிப் பதிஞ்சது "உள்ளம் உருகுதைய்யாவின்" மேலேயே என்று!

விஷயம் தெரிஞ்சி, வீட்டில் அப்பா என் மேல் பதியோ பதி என்று பதிய, ஒரே கலாட்டா! அப்பறம் பாட்டி வந்து "வடிவேலன் மனச வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா!
அதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க-ன்னு பாட்டின் விவரம் தெரியாமல் என்னைச் சப்போர்ட் செய்ய,
வீடே கொல்லென்று....சிரிக்க...

வீடுகள் வெறும் செங்கற்களால் கட்டப்படுகின்றன!
இல்லமோ இனிய இதயங்களால் கட்டப்படுகின்றன!!

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், முருகப் பெருமானோடு சேர்ந்து, பழைய நினைவுகளும் இனிக்கும்!



டி.எம்.எஸ் மிகவும் உருகிப் பாடிய பாட்டுகளில் இது மிகவும் பிரபலமான பாடல். ஆரம்ப இசையே அமர்க்களமாய்த் தொடங்கும்! மெலிதான இசை மட்டுமே பின்புலத்தில்! வயலின்-வீணை இவற்றோடு தாளக் கட்டை! ஒவ்வொரு பீட்டிலும், தாளம் தட்ட தட்ட, நம் மனத்தையே தட்டுவது போல இருக்கும்!

எழுதியவர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. சிலர் தண்டபாணி தேசிகர் என்றும் சொல்கிறார்கள்! சிலர் வாலி என்றும் சொல்கிறார்கள்! அறிந்தவர் சொல்லுங்கள்!
(பிற்சேர்க்கை: ஆண்டவன் பிச்சை (எ) முருகப் பெண் துறவியே இப்பாடலை எழுதியது!)
பாடலைக் கேட்டு உருக, இங்கே சொடுக்கவும்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா....

(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா

(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா

(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

(உள்ளம் உருகுதய்யா)




ஈழத்தில், நல்லைக் கந்தசுவாமி ஆலயத்தில் நடக்கும் திருமஞ்சத் திருவிழா! மஞ்சள் ஜொலி ஜொலிப்பில் ஜொலிக்கும் முருகப் பெருமானின் திருவுருவப் படங்கள் என்று நண்பர் கானா பிரபா, தமது பதிவில் ஒவ்வொரு நாளும் விழாவாக இடுகிறார். இதுவரை காணவில்லை என்றால், ஓடிப் போய் கந்தனைக் காணுங்க! இதோ...

Friday, August 10, 2007

நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை




முருகா....முருகா...முருகா...
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை... சுவாமிமலை



ஓம் ஓம் என வருவோர்க்கு
நாம் என துணை ஆவான்
வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான்

தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவர்க்கு
சுவாமிநாதன் சொன்னதை அறிந்தவர்க்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவர்க்கு
நன்மைகள் உருவாகும்

(நாடறியும் ...)


இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: பித்துகுளி முருகதாஸ்
திரைப்படம்: தெய்வம்
இசை: குன்னகுடி வைத்தியநாதன்

Monday, August 06, 2007

ஆடிக்கிருத்திகையில் ஆடிவரும் அழகன்





திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா





இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்




பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.

பாபநாசம் சிவனைவிட முருகனை அனுபவித்தவர் யாரும் கிடையாது . பல பாடல்கள் அழகன் முருகன் மீது புனைந்துள்ளார். அருணகிரியாருக்கும் சிவனுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் முருகனை நேரடியாக பாடமாட்டார்கள்.மால்மருகனை சொல்லிய பிறகுதான் மருகனைச் சொல்லுவார்கள்.

அவரின் பல பாடல்களில்என் மனத்தை கவர்ந்த பாடல் இது.


ராகம் :- நடபைரவி தாளம்:- கண்ட சாபு

பல்லவி
கந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது.. ........( கந்தா வந்தருள்)
அனுபல்லவி
செந்தூர் வளர் குஹா அடிமையின்
சிந்தாகுலம் தீர நீ வலிய
வந்தால் உந்தன் மஹிமை குறையுமோ
வள்ளி மணவாளா புள்ளி மயிலேரும்....(கந்தாவந்தருள்)

சரணம்


பச்சிளங் குழந்தையைப் பெற்ற தாய்


பரிந்தணைப்பது கடனன்றோ


பரம தயாகரன் என்று பேர் புகழ்


படைத்தவன் நீயன்றோ


ஸச்சிதானந்த மூர்த்தி சரவணோத்


பவ குஹனே சங்கரன் மகனே


தயவுடனே திருமால் மருகா-- மன

மிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து...(கந்தாவந்தருள்)

கந்தனே எனக்குமுன் வந்து நின்று உன் அருள்மழையைப் பொழியக்கூடாதா.எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி. திருச்செந்தூர் வளர் குஹா என்னுடைய சிந்தனையில் எப்போது இருக்கும் பயத்தை தீர்க்க வரக்கூடாதா உன்னை இவ்வளவுதூரம் வருந்தி வருந்தி நான் அழைத்தால் தான் வருவாயோ ஏன் என்மீது அன்பு கொண்டு
நீயே வலிய வந்து என்னைக் காத்தால் அதனால் உன் மஹிமை என்ன குறைந்துவிடுமோ. சிசுவை ரக்ஷிப்பது தாயின்கடமை. உனக்கு பரம தயாகரன் என்ற பேர் அதை காப்பாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ண்ம் இருந்தால், திருமாலின் மருமகனே, நீயே மனமிரங்கி தயவோடு உன் அடிமையான என்னை காத்தருள வா என்று உரிமையோடு அழைக்கிறார் திரு.சிவன் அவர்கள்

சரி அழகன் தரிசனம் ஆயிற்று பாடலையும் பார்த்தாகி விட்டது இனி இந்தப்
பாடலை மும்பை ஜெய்ஸ்ரீ தன் இனிய குரலிசையால் உருகி உருகிப் பாடுவதை இங்கே கேட்டு மகிழுங்கள்">

எல்லாம்வல்ல திருத்தணிமுருகன் எல்லாருக்கும் நன்மைகளைத் தந்து அருளட்டும்.!










Tuesday, July 31, 2007

"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]


"கந்தகுரு கவசம்" -- 11 [441-447]

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.

இந்தப் புனித கவசத்தை இங்கு அளிக்க அருள் புரிந்த ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்கும், நாமக்கல் சிபிக்கும், இதனைத் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் எனது நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

Monday, July 30, 2007

"கந்தகுரு கவசம்" -- 10 [362-400]


"கந்தகுரு கவசம்" -- 10 [362-400]

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

Sunday, July 29, 2007

"கந்தகுரு கவசம்" -- 9 [321-361]


"கந்தகுரு கவசம்" -- 9 [321-361]

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

Thursday, July 26, 2007

"கந்தகுரு கவசம்" -- 8 [282-320]



"கந்தகுரு கவசம்" -- 8 [282-320]
[ஸ்கந்தகிரியின் பெருமையும், அது இருக்கும் இடமும், அத்தலத்தைப் போற்றிடும் பெரியோரைப் பற்றியும் இங்கு சொல்லப்படுகிறது.]

மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

07/27/07 "கந்தகுரு கவசம்" -- 7 [241-281]




"கந்தகுரு கவசம்" -- 7 [241-281]

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்


[எல்லாமே அன்புதான் என்பதை உணர்த்தும் அருமையான வரிகள்!
அனைவரும் இதனை உணர்ந்தால், கேள்விகள்தான் ஏது?]

Sunday, July 22, 2007

07/26/07"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]



"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

[இன்னும் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்த, கவசம் தொடரும்!]


இடகலை பிங்கலை= முன்னம் சொன்ன ஸோஹம் ஹம்ஸம் எனும் ஹம்ஸ மந்திரம் மூலமமக, இடது, வலது நாசி வழியே செல்லும் காற்று!
நித்யானந்தம்= உனை உணர்ந்ததால் எனக்கு வரும் இன்பம்.
அத்வைதானந்தத்தில்= நீயும் நானும் ஒன்றானோம் எனும் ஆனந்தம்.

"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]



"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]

முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.

மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.

முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]


பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ
என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205


[கவசம் தொடரும்!]
**********************************

படிப்பவர்களின் வசதிக்காக முழு மூல மந்திரமும் இங்கே!

"ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ"

[Om Saum saravaNabhava sriim hriim kliim
klaum Saum namaha]

அக்ஷர லக்ஷம் என்றால், ஒவ்வொருஎழுத்துக்கும் ஒரு லக்ஷம் எனப் பொருள்.
"ஓம்[1] ஸௌ[2] ம்[3] ச[4] ர[5] வ[6] ண[[7] ப[8] வ[9] ஸ்ரீ[10] ம்[11] ஹ்ரீ[12]] ம்[13] க்லீ[14] ம்[15]
க்லௌ[16] ம்[17] ஸௌ[18] ம்[19] ந[20] ம[21] ஹ[: என்பதால் இது கணக்கில் வராது.]"

21 லக்ஷம் முறை ஜெபிக்க வேண்டும்.

கோடித்தரம் என்றால், ஒரு கோடி முறை இதை ஜெபிக்க வேண்டும்.

இதை ஜெபிப்பதால் கிடைக்கும் பலன்கள் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.

முருகனருள் முன்னிற்கும்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP