Tuesday, December 26, 2006

019: அசுரர் தம்மை வென்ற வடிவேலன்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!



அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்





குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்



நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்



மெட்டு: காவடிச்சிந்து
இயற்றியவர்: அண்ணாமலை ரெட்டியார்
பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள்

Monday, December 18, 2006

018: பாரதியின் வேலன் பாட்டு!

பாரதியின் வேலன் பாட்டு

பாடியவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
பாடல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!


வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!

சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே


கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!



வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.


கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!


பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை

"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!

Sunday, December 03, 2006

017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)




திரைப்படம்: கந்தன் கருணை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


திருக்கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயன் புகழைப் பாடுவோம்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP