Thursday, November 23, 2006

016. வனவேடன் ஒருவன் வந்தான்

எத்தனையே அரிய பெரியவர்கள் கவி சமைத்துக் கந்தனைக் களித்திருக்கிறார்கள். அதை இசை வல்லுனர்கள் இனிமை கூட்டி உளமும் உயிரும் உருகிடப் பாடிப் புண்ணியம் செய்திருக்கிறார்கள். நாமும் முருகன் மேல் பாடல் எழுதி அதற்கு இசையும் கோர்த்தால் எப்படியிருக்கும் என்று நெடுநாள் ஆவல். ஆவல் பெருகினால் செயல்படுத்துவது கந்தனல்லவா. கவியும் தந்து அதைப் பாட ஷைலஜா அவர்களையும் அறிமுகப்படுத்தினான். இதோ பாடல். இதை இங்கே ஷைலஜா அவர்களின் இனிய மெட்டிலும் குரலிலும் கேட்கலாம்.வனவேடன் ஒருவன் வந்தான்
எனைக் கணை போலும் விழியாலே
உருக்கியே நின்றான்
முருகன் என்னும் பெயரோடு (வனவேடன்

சிலை தொட்ட கை கண்டுச் சிலையாவதோ
மலை தோற்ற தோள் கண்டு மலைப்பாவதோ
தலையோடும் அறிவில் அவன் தலைப்பாவதோ
நிலைமாறி நான் இன்று தடுமாறவோ (வனவேடன்

வேல் கொண்ட கந்தன் எனக் காட்சி நின்றான்
கோள் தன்னை விரட்டி நல்ல ஆட்சி தந்தான்
பாலுள்ளம் பொங்கி எழ மாட்சி செய்தான்
கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான் (வனவேடன்

அன்புடன்,
கோ.இராகவன்

22 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) November 23, 2006 2:21 PM  

ஜிரா,
சுட்டியின் URL தவறாக உள்ளது!
சரி செய்கிறீர்களா?
அதுவரை காத்திருக்க முடியாமல், நம் திருவரங்கப்ரியா-வின் குரல் கேட்க ஆவலாய் உள்ளோர்க்கு இதோ:
http://www.geocities.com/kumaranmalli/VanavedanOruvanVandhan.mp3

kannabiran, RAVI SHANKAR (KRS) November 23, 2006 2:32 PM  

ஜிரா
கவிதை அருமை! - இயல்
ஷைலஜா
பாட்டும் அருமை!! - இசை

"மலை தோற்ற தோள் கண்டு மலைப்பு ஆவதோ" - ஜிரா சொற்களின் சுவை மிக இனிது! அழகாக ஆண்டுள்ளீர்கள்!
முருகன், கந்தன் என்ற இரு திருப்பெயர்கள் பாடலில்! இயலுக்கு ஒன்று, இசைக்கு ஒன்றாய் அமைந்து விட்டது பாருங்கள்!

"நிலைமாறி" என்பதில் அழகாய் நிறுத்திப்
பின்னர் "நான் இன்று தடுமாறவோ"
என்று அழகாகப் பாடுகிறார் திருவரங்கப்ரியா! பின்னணி இசை இல்லாததாலோ என்னவோ, தமிழ்ச் சொற்கள் அப்படியே அழகாக வந்து விழுகின்றன!

இப்படி தேனில் தோய்த்த பலா, சுவைக்கத் தந்தீர்களே! நன்றி!!!
வாழ்த்துக்கள்!!!

G.Ragavan November 23, 2006 8:54 PM  

நன்றி ரவி. சுட்டியிலிருந்த தவறு சரி செய்யப்பட்டு விட்டது. :-)

ஞானவெட்டியான் November 23, 2006 9:50 PM  

அன்பு இராகவா,
பாடலும், பாடிய திருவரங்கப்ரியாவின் இனிய குரல்வளமும், மனதிற்கு இதமாயுள்ளது. பிண்ணணி இசையுடன் சேர்ந்திருந்தால் இன்னும் இனிமை சேர்ந்திருக்குமென்பது எமது புரிதல்.

இருவருமே வாழ்க! வளர்க!!

குமரன் (Kumaran) November 24, 2006 2:08 AM  

இராகவன். முருகன் என்றால் திருவரங்கத்தாருக்கு ஆகாது என்று ஒரு பதிவில் சொன்னீர்களே. பாருங்கள் திருவரங்கப்ரியா எவ்வளவு அருமையாக உங்கள் பாடலைப் பாடியிருக்கிறார். :-)

அருமையான பாடல் வரிகள். வலையிலேற்றுவதற்கு அந்தப் பாடலை நீங்கள் அனுப்பிய போது கூட இது தங்கள் வரிகள் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. பாடியவர் யார் என்று கூட கேட்க நினைத்துப் பின்னர் பதிவில் சொல்வீர்கள் என்று விட்டுவிட்டேன்.

நல்லா எழுதியிருக்கீங்க. நல்லா பாடியிருக்காங்க. நல்ல கூட்டு முயற்சி.

ஷைலஜா November 24, 2006 3:08 AM  

ஆஹா என் குரல் இங்க வந்தாச்சா?
தசரதன் மைந்தன் அழகா எழுதின பாடலை சிதைக்காமல் பாடினேனே தவிர சிறப்பாக பாட இயலவில்லை. தொண்டைல கிச்கிச் அன்னிக்கு!இதுவரை எழுதிப் படுத்தினது போதாதுன்னு பாடியும் நான் படுத்துவதை பாராட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி பல!

திருவரங்கப்ரியா

ஷைலஜா November 24, 2006 3:08 AM  

ஆஹா என் குரல் இங்க வந்தாச்சா?
தசரதன் மைந்தன் அழகா எழுதின பாடலை சிதைக்காமல் பாடினேனே தவிர சிறப்பாக பாட இயலவில்லை. தொண்டைல கிச்கிச் அன்னிக்கு!இதுவரை எழுதிப் படுத்தினது போதாதுன்னு பாடியும் நான் படுத்துவதை பாராட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி பல!

திருவரங்கப்ரியா

G.Ragavan November 24, 2006 2:13 PM  

// "மலை தோற்ற தோள் கண்டு மலைப்பு ஆவதோ" - ஜிரா சொற்களின் சுவை மிக இனிது! அழகாக ஆண்டுள்ளீர்கள்!
முருகன், கந்தன் என்ற இரு திருப்பெயர்கள் பாடலில்! இயலுக்கு ஒன்று, இசைக்கு ஒன்றாய் அமைந்து விட்டது பாருங்கள்! //

நன்றி ரவி. சிலை-சிலை, மலை-மலை என்று வரும்படி எழுதியது.

// "நிலைமாறி" என்பதில் அழகாய் நிறுத்திப்
பின்னர் "நான் இன்று தடுமாறவோ"
என்று அழகாகப் பாடுகிறார் திருவரங்கப்ரியா! பின்னணி இசை இல்லாததாலோ என்னவோ, தமிழ்ச் சொற்கள் அப்படியே அழகாக வந்து விழுகின்றன! //

உண்மைதான் ரவி. முதலில் இதற்கு ஷைலஜா காவடிச் சிந்து மெட்டில் பாடியிருந்தார். அது நன்றாக இருந்தது. ஆனால் இது காதல் பாட்டு என்பதால் இந்த மெட்டில் மீண்டும் பாடிக் கொடுத்தார். மிகவும் அருமையாகவே.

G.Ragavan November 24, 2006 2:14 PM  

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,
பாடலும், பாடிய திருவரங்கப்ரியாவின் இனிய குரல்வளமும், மனதிற்கு இதமாயுள்ளது. பிண்ணணி இசையுடன் சேர்ந்திருந்தால் இன்னும் இனிமை சேர்ந்திருக்குமென்பது எமது புரிதல்.

இருவருமே வாழ்க! வளர்க!! //

நன்றி ஐயா.

இசைகோர்ப்பு என்பது எப்படி முடியுமென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டிய முருகனே..அதற்கும் வழி காட்ட வேண்டும்.

G.Ragavan November 24, 2006 2:17 PM  

// குமரன் (Kumaran) said...
இராகவன். முருகன் என்றால் திருவரங்கத்தாருக்கு ஆகாது என்று ஒரு பதிவில் சொன்னீர்களே. பாருங்கள் திருவரங்கப்ரியா எவ்வளவு அருமையாக உங்கள் பாடலைப் பாடியிருக்கிறார். :-) //

குமரன்...ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிப் பரவசிக்கிறவன் நான். விளக்கத்திற்குச் சொன்ன வரிகள் அவை.

// அருமையான பாடல் வரிகள். வலையிலேற்றுவதற்கு அந்தப் பாடலை நீங்கள் அனுப்பிய போது கூட இது தங்கள் வரிகள் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. பாடியவர் யார் என்று கூட கேட்க நினைத்துப் பின்னர் பதிவில் சொல்வீர்கள் என்று விட்டுவிட்டேன். //

இந்தப் பாடலை உங்களுக்கு அனுப்பியதும்...நீங்கள் கேட்பீர்கள் என நினைத்தேன். கேட்டிருக்கின்றீர்கள். கேட்டதும் பாடல் குறித்துக் கேட்பீர்கள் என நினைத்தேன். கேட்கவில்லையே!

// நல்லா எழுதியிருக்கீங்க. நல்லா பாடியிருக்காங்க. நல்ல கூட்டு முயற்சி. //

நன்றி குமரன். இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

G.Ragavan November 24, 2006 2:18 PM  

// ஷைலஜா said...
ஆஹா என் குரல் இங்க வந்தாச்சா? //

வந்தாச்சு வந்தாச்சு

// தசரதன் மைந்தன் அழகா எழுதின பாடலை சிதைக்காமல் பாடினேனே தவிர சிறப்பாக பாட இயலவில்லை. தொண்டைல கிச்கிச் அன்னிக்கு!இதுவரை எழுதிப் படுத்தினது போதாதுன்னு பாடியும் நான் படுத்துவதை பாராட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி பல! //

நல்லாப் பாடியிருக்கீங்க. அதுனால பாராட்டாம இருக்க முடியுமா!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 25, 2006 1:02 AM  

இது ஷைலஜா அவர்களுக்கு,
சின்னக் குறிப்பு கொடுங்க! என்ன ராகம், என்ன மெட்டு என்று!
மெட்டு ஏதோ பிரபலமான பாட்டு போலவே உள்ளது! என்னன்னு சொல்லுங்க! நல்லா அமைஞ்ச பாட்டு!
அப்படியே எனக்கு என் profile-இல் இருந்து ஒரு மின்-மடல் தட்ட முடியுமா? நன்றி!

தி. ரா. ச.(T.R.C.) November 25, 2006 6:12 AM  

கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான்
அருமையான வரிகள்.அருண்கிரியாரின் தத்துவம் கவிதையாக மிளிர்கிறது.கவிதைக்கு இசையும் .அதுவும் யமுனா கல்யாணி ராகம் என்று நினைக்கிறேன் மிகப் பொருட்குரல்வளமும் அழகு சேர்க்கிறதுக்தம்.சதாசிவ பிரும்மேந்திரரின் பிபரே ராமரசம் பாட்டும்,சினிமாவில் கர்ணன் படத்தில் வரும் கண்ணுக்கு குலமேது பாட்டும் அந்த ராகம்தான் நன்றாகப் பொருந்துகிறது.

தி. ரா. ச.(T.R.C.) November 26, 2006 11:51 AM  

கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான்
அப்படி ஆண்டவனின் கால் ஒருவன் தலைபட்டால் என்ன ஆகும் தெரியுமா ஜி.ரா. ஊத்துக்காடுகவியின் வாயாலயே கேளுங்கள்
.
" ஒருகணம் உன் பதம் படும் என் மேலே
மறு கணம் நான் உயர்வேன் மென்மேலே
திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே
திருமகளென மலரடி பெயர்ந்து உனைத்
தொடர்ந்த ராதைக்கும் இடம் தருவேனே
ஸ்ருதியோடு லயமிகுக்கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கு இணை யாரென் மகிழ்வேனே
தவமிகு ஸுரரொடு முனிவரும் இயல
தனித்த பெரும் பேரடைவேனே
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்
இறைவனே" ......

G.Ragavan November 26, 2006 11:56 PM  

// தி. ரா. ச.(T.R.C.) said...
கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான்
அருமையான வரிகள்.அருண்கிரியாரின் தத்துவம் கவிதையாக மிளிர்கிறது.கவிதைக்கு இசையும் .அதுவும் யமுனா கல்யாணி ராகம் என்று நினைக்கிறேன் மிகப் பொருட்குரல்வளமும் அழகு சேர்க்கிறதுக்தம். //

உண்மைதான் தி.ரா.ச. பாடலுக்கு இனிமையாக மெட்டமைத்துப் பாடியிருக்கிறார் ஷைலஜா. இந்தப் பாடலை எழுதும் பொழுதே ஒரு சந்தத்தோடுதான் எழுதினேன். ஆனால் இசைப்பயிற்சி பெற்ற ஷைலஜா வேறொரு சந்தத்தில் மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

// கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான்
அப்படி ஆண்டவனின் கால் ஒருவன் தலைபட்டால் என்ன ஆகும் தெரியுமா ஜி.ரா. ஊத்துக்காடுகவியின் வாயாலயே கேளுங்கள் //

நல்லதொரு பாடலை நீங்கள் நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள். ஊத்துக்காடரின் பாடல்கள் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். ஆறுமோ ஆவல் ஆறுமுகனை நேரில் காணாமல் அவற்றில் ஒன்று.

கோவி.கண்ணன் [GK] November 27, 2006 12:06 AM  

ஜிரா,

உங்க கெட்டப் (புது போட்டோ) கூட எதோ வனவேடன் போலத்தான் இருக்கிறது.

மாதவன் மாதிரி இருந்திங்க, இப்ப சூரியா மாதிரி இருக்கிங்க !
:)

tbr.joseph November 27, 2006 12:31 AM  

ஜிரா
கவிதை அருமை! - இயல்
ஷைலஜா
பாட்டும் அருமை!! - இசை//

அதே, அதே..

Anonymous November 27, 2006 1:52 PM  

"அவன் கால் பட்டழிந்தது. என் தலைமேல் அயன் தன் கையெழுத்தே!!! எனும் அருணகிரியார் ...அடி நினைவுக்கு வந்தது.
நல்ல முயற்சி!!
யோகன் பாரிஸ்

Sridhar Venkat November 27, 2006 2:59 PM  

பாடல் மிக நன்றாக இருக்கின்றது. பாடியது அதைவிட அருமை.

தொடரட்டும் உங்கள் பணி. மேன்மேலும் இதைப்போல் நிறைய முயற்சிகள் நீங்கள் செய்யவும் அவைகள் யாவும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

கோபிநாத் November 30, 2006 12:51 AM  

ஜிரா சார்,

பாடல் அருமை, பாடியதும் அருமை, இவை எல்லவற்றையும் விட உங்கள் இருவரின் முயற்சி அருமையிலும் அருமை.

திருவரங்கப்ரியாவுக்கு - வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள்

பத்மா அர்விந்த் December 03, 2006 2:13 PM  

இராகவன், ஷைலஜ: பாராட்டுக்கள். மேலும் பாடல்கள் பல எழுதி இசையமைத்து பாட வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி December 03, 2006 3:30 PM  

ஆஹா! பாடலை இயற்ற கவிஞர் ஒருவரும், இசையமைத்துப் பாட பாடகி ஒருவரும் உள்ளனர்.

மென்மேலும் தமிழ்க்கடவுள் மேல் பாடல்கள் இயற்றிப் பாடலாமே!

அவன் புகழ் எழுத இனிமை. பாட இனிமை. கேட்க எல்லாருக்கும் இனிமை.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP